பி.எம்.டபிள்யூ ஆக்ஸ்ஃபோர்டு கார் ஆலையில் 400க்கும் மேற்பட்டோர் வேலை பறிபோகிறது!

(Image: oxfordmail.co.uk)

ஆக்ஸ்ஃபோர்டு, 26 ஆகஸ்ட் 2020: இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள பி.எம்.டபிள்யூ மினி கார் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை இழக்கும் சூழல் உருவாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்ஃபோர்ட் பி.எம்.டபிள்யூ ஆலையில் 950 ஏஜென்சி பணியாளர்களில் 400க்கும் மேற்பட்டோர் பணி இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது. கொரோனா பெருந் தொற்று காரணமாக இங்கு கடந்த மார்ச் மாதம் தொழிற்சாலை மூடப்பட்டது. அதன் பிறகு மே மாதம் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் கார் வாங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக உற்பத்தி குறைந்துள்ளது. இதை எதிர்கொள்ள ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.

தற்போது இங்கு மூன்று ஷிப்டில் வேலை நடக்கிறது. இதை இரண்டாக குறைக்க ஆலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஆட்குறைப்பை அரங்கேற்றிவிட்டு இதை வருகிற அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்த தொழிற்சாலை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இங்கு வேலை செய்பவர்களை ஜிஐ நிறுவனம் கையாளுகிறது. அவர்கள் தேவையைப் பொருத்து, திறன், ஒழுக்கம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் யாரை வைத்திருப்பது, யாரை அனுப்புவது என்று முடிவு செய்வார்கள். யாருக்கு எல்லாம் வேலை பாதிப்பு ஏற்படும் என்ற தகவல் செப்டம்பர் மத்தியில் தெரிவிக்கப்படும்.

இது குறித்து நிறுவனத்தின் மனிதவள மேலாண்மை பிரிவு இயக்குநர் பாப் ஷாங்க்லி கூறுகையில், “மற்ற ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களைப் போலவே நாங்களும் பாதிக்கப்பட்டுள்ளோம். 2020ம் ஆண்டுக்கு நாங்கள் நிர்ணயித்த இலக்கு சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றப்பட்டு வருகிறது. எனவே, இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது. இந்த புதிய ஷிப்ட் மாற்றம் அக்டோபர் மாதத்தில் அமலுக்கு வரும். தொழிலாளர் சங்கத்துடன் தீவிரமாக விவாதித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். எங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு பணியாளர்கள் வேலை இழப்பில் இருந்து பாதுகாத்துள்ளோம்” என்றார்.

ஒரு ஷிப்ட் குறைக்கப்படுவதன் மூலம் இங்கு தினசரி 1000ம் என்ற அளவில் இருந்த கார் உற்பத்தி 800 முதல் 900 என்ற அளவில் குறையும். இங்கு கடந்த 2019ம் ஆண்டு 4000ம் பேர் பணியாற்றினார்கள். இங்கு கடந்த ஆண்டு 222,340 கார்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

ஆக்ஸ்ஃபோர்டு கிழக்கின் லேபர் எம்.பி, ஆக்ஸ்ஃபோர்டு நகர சபையின் தலைவர் சூசன் பிரவுன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், “இந்த நிகழ்வுக்காக வருந்துகிறோம். மிகவும் கவலைப்படுகிறோம். ஆலை மிகவும் உற்பத்தித் திறன் மிக்கதாக இருந்தாலும், துரதிஷ்டவசமாக கோவிட்19 நெருக்கடி காரணமாக சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுக்க தொழிற்துறை பாதிப்பை சந்தித்து வரும் நிலையில் இந்த ஆலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் எதிர்காலத்தை உறுதிபடுத்தவும், உள்ளூர் வேலையைப் பாதுகாக்கவும் முடிந்ததை நாங்கள் இருவரும் பி.எம்.டபிள்யூ-வுடன் இணைந்து செயலாற்றுவோம்” என்று கூறியுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk