கடைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயம்! – போரிஸ் ஜான்சன் உறுதி

இங்கிலாந்தில் கடைகளுக்குள் மூக்கு மற்றும் வாயை மூடும் வகையில் முகக் கவசம் கட்டாயம் அணி வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று கட்டுக்குள் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக புதுப்புது தொற்று ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது. சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் சமூக பரவல் என்ற நிலை வராலம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் கடைகளுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிய வேண்டும் என்றார். ஆனால், அமைச்சர் மைக்கேல் கோவ் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பு வர வாய்ப்பில்லை என்றார். இதனால் மக்கள் மத்தியில் குழப்பம்தான் மிஞ்சியது.

அரசு என்ன முடிவெடுத்தது என்று உறுதியாக அறிவிக்க வேண்டும் என்ற லேபர் கட்சி வலியுறுத்தியது. இந்த நிலையில் இன்று ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறுகையில், “முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படும். இதற்கான முடிவு இன்னும் ஒரு சில தினங்களில் எடுக்கப்படும். இதற்கான வழிகாட்டுதல்கள் உருவாக்கப்படும்.

முகக் கவசம் கொரோனா பரவலைத் தடுக்கும் என்று அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, முகக் கவசம் அணியலாம். முகக் கவசம் அணிவது நமக்கு கூடுதல் காப்பீடு போல. இது கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த, நாம் பழைய நிலைக்குத் திரும்ப உதவும்” என்று கூறியுள்ளார்.

முகக் கவசம் அணிவது கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உதவும். தற்போது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மட்டும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. இது போன்ற வழிகாட்டுதல்களை வருகிற 27ம் தேதி முதல் அமல்படுத்த வேல்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் கடைகளுக்குள் இருக்கும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம் என்ற நிலை உள்ளது. ஐக்கிய ராஜியத்தின் வேறு எந்த இடத்திலும் இதுபோன்ற உத்தரவு இல்லை. தற்போது இங்கிலாந்தைப் பொருத்த வரை முகக் கவசம் உங்களைப் பாதுகாக்காது என்ற அளவிலேயே வழிகாட்டுதல்கள் உள்ளன. அதே நேரத்தில், உங்களுக்கு கொரோனாத் தொற்று இருக்கிறது என்றால், அது அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் மறைவாக உள்ளது என்றால், உங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு கொரொனா தொற்று ஏற்படுவதை முகக்கவசம் அணிவது தடுக்கும்” என்ற அளவிலேயே உள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் முகக் கவசம் அணிவதை வலியுறுத்தும் நிலையில் இங்கிலாந்தில் அதை கட்டாயமாக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.