லண்டன்: சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய தேசிய கீதம் பாடிய பாகிஸ்தானியர்கள்!

இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டு வரும் சீன அரசைக் கண்டித்து லண்டனில் இந்திய – பாகிஸ்தானியர்கள் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடி சீனாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்தது ஆச்சரியத்தை அளித்தது.

சீனாவின் கொள்கைகள், அடக்குமுறைகளைக் கண்டித்து லண்டனில் உள்ள சீன தூதரகத்துக்கு எதிரில் இந்தியர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானியர்களும் கலந்துகொண்டு இந்திய தேசிய கீதத்தை பாடினர். ஆரிஃப் ஆஜாக்கியா என்ற பாகிஸ்தானிய மனித உரிமை ஆர்வலர் இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வாழ்க்கையில் முதன் முறையாக, இந்தியாவின் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடல் பாடும் நிகழ்வில் பங்கேற்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, இந்திய, பாகிஸ்தானியர்கள் சீனாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். சீனா ஒழிக, சீனாவை புறக்கணிப்போம் என்று கோஷம் எழுப்பினர்.

பாகிஸ்தான் ஆளுகைக்குள் உள்ள காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவரும் க்ளாஸ்கோ பகுதியில் வசித்து வருபவருமான மிர்சா கூறுகையில், “சி.பி.இ.சி திட்டத்துக்காக கில்ஜித் பால்டிஸ்தான் பகுதியில் சீனா செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. நான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியைச் சேர்ந்த இந்தியன். சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக க்ளாஸ்கோவில் இருந்து பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன்” என்றார். இந்த போராட்டத்தில் பங்கேற்ற மற்ற பாகிஸ்தானியர்களும் பாகிஸ்தான் நாட்டில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கேற்றதாக குறிப்பிட்டனர்.

சீன அதிபர் ஸீ சிங்பிங்குக்கு எதிராக இது போன்ற போராட்டங்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.