இங்கிலாந்தின் கொரோனா ஆர் விகிதம் 1க்கு கீழ் குறைந்தது!

R number, UK, கொரோனா, ஆர் நம்பர்
(Image: Matthew Horwood / theguardian.com)

இங்கிலாந்தின் கொரோனா ஆர் விகிதம் தற்போது 0.9 ஆகப் பதிவாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு இப்போதுதான் 1க்கு கீழ் குறைந்துள்ளது என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஒரு கொரோனா நோயாளி மூலமாக எத்தனை பேருக்கு தொற்று பரவியது என்பதைக் கண்டறிவது ஆர் நம்பர் எனப்படுகிறது. இங்கிலாந்தில் இந்த ஆர் நம்பர் விகிதத்தை அரசின் அறிவியல் ஆலோசகர்கள் கணக்கீடு செய்கின்றனர்.

ஆர் நம்பர் அதிகமாக இருந்தால் அதிக அளவில் தொற்று பரவி வருகிறது என்று அர்த்தம். எனவே, ஒன்றுக்கு கீழாக அது இருப்பது மக்களுக்கு நல்லது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இங்கிலாந்தின் ஆர் விகிதம் 1க்கு கீழ் இருந்தது. அதன் பிறகு செப்டம்பர், அக்டோபரில் அது மூன்று என்ற அளவுக்கு அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து ஆர் நம்பரை கட்டுக்குள் கொண்டு வர மூன்று அடுக்கு ஊரடங்கும் அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் முழு ஊரடங்கும் கொண்டு வரப்பட்டது.

இந்த ஊரடங்கு காலத்தில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் ஒன்று கூடுவது தடுக்கப்பட்டது.

இதன் விளைவாக தற்போது ஆர் நம்பர் 1-க்கு கீழ் வந்துள்ளது. ஆர் நம்பர் அடிப்படையாகக் கொண்டே ஊரடங்கு உள்ளிட்டவை திட்டமிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமையன்று கணக்குபடி 16,022 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது 25 சதவிகிதம் சரிவாகும். மேலும், கடந்த 28 நாட்களில் கொரோனா உறுதியானவர்களில் 521 பேர்  உயிரிழந்துள்ளனர்.

கொரோனா எண்ணிக்கை மற்றும் ஆர் நம்பர் குறைந்தாலும் இன்னும் இங்கிலாந்தின் சில பகுதிகளில் வைரஸ் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.

வட கிழக்கு, யார்க்‌ஷையர், ஹம்பர் போன்ற பகுதிகளில் தினமும் கொரோனா கண்டறியப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகள் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு கட்டுப்பாட்டின் கீழ்தான் வருகின்றன. கிட்டத்தட்ட 23 மில்லியன் மக்கள் இந்த கட்டுப்பாட்டின் கீழ் வருவார்கள் என்று கூறப்படுகிறது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter