முக மாஸ்க் விவகாரத்தில் கடுமையாக இருக்க வேண்டியிருக்கும்! – போரிஸ் ஜான்சன்

க்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வதை ஊக்கப்படுத்த வேண்டியுள்ளது. அமைச்சர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இன்றைய பேட்டியின்போது அவரே முகக் கவசம் அணிந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருந்தார்.

கொரோனாவைத் தவிர்க்க சமூக இடைவெளி, முகக் கவசம் அவசியம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த வாரம் பப் திறக்கப்பட்டபோது சமூக இடைவெளியும், மாஸ்க் அணிதலும் மக்கள் மத்தியில் இல்லாமலே போனது. தற்போது மாஸ்க் அணியாமலே பெரும்பாலான மக்கள் பொது வெளியில் வருகின்றனர். அதே நேரத்தில் ஸ்காட்லாந்தில் இன்று (ஜூலை 10) முதல் வெளியே பொது இடங்களுக்கு வருபவர்கள் முக மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக் கேள்வி பதில் வீடியோவில் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், “கடைகளுக்கு வருபவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று கொண்டுவருவதற்கான வழிமுறைகளை கவனித்து வருகிறோம்” என்றார்.

வருங்கால திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, “எல்லோரும் நம்மால் முடிந்தால் வீட்டில் இருப்போம் என்று நினைக்கின்றனர். ஆனால் நாம் அனைவரும், நம்மால் முடியும் என்றால் நம்முடைய பழைய வேலைக்குத் திரும்புவோம் என்று சொல்ல நினைக்கிறேன். மக்கள் தங்கள் வாழ்க்கை மிகவும் சகஜமான முறையில் முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “எல்லோரும் எல்லா நேரமும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய உலகத்துக்கு செல்லப்போவது இல்லை என்று நினைக்கிறேன். சில குறிப்பிட்ட இடங்களுக்கு, புதிய நபர்களை சந்திக்க செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறலாம்” என்றார்.

உலக சுகாதார நிறுவனம் சமூக இடைவெளி கடைபிடிக்க முடியாத இடங்களில் முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று பரிந்துரைக்கிறது. ஆனால் இங்கிலாந்தில் முகக் கவசம் பற்றிய கவலையின்றி பலரும் உள்ளனர். ராயல் சொசைட்டியின் தலைவர் பேராசிரியர் சர் வெங்கி ராமகிருஷ்ணன் முகமூடி பயன்பாடு அடிப்படையில் இங்கிலாந்து மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.

தொடக்கத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். தற்போது பொது போக்குவரத்து தொடங்கப்பட்ட பிறகு பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். எல்லாற்றையும் அரசே சொல்லும் என்று காத்திருக்காமல், மக்கள் உணர்ந்து நடந்துகொண்டால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.