ஆக்டனில் 10 வயது சிறுவன் கொலை… நள்ளிரவில் பெண் கைது!

Cumberland Park
(Image: Google Map)

ஆக்டனில் 10 வயது சிறுவன் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் 40 வயதான பெண்மணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் மெட் போலீசார் கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு லண்டன் ஆக்டனில் இன்று காலை 2.30 மணி அளவில் மெட் போலீசாருக்கு விபத்து நடந்துவிட்டதாக சிறுவன் ஆபத்தில் உள்ளதாக பெண் மணி ஒருவரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக அந்த பெண்மணி கூறிய கம்பர்லேண்ட் பூங்காவில் உள்ள அந்த வீட்டுக்கு போலீசார், ஆம்புலன்ஸ் சேவை விரைந்து வந்தது.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது சிறுவன் இறந்து கிடந்தான். அந்த சிறுவன் யார், எதனால் இறந்தான் என்பது உள்ளிட்ட தகவல் 40 வயதான பெண்மணிக்கு தெரியும் என்று போலீசார் நம்புகின்றனர். சிறுவனின் உறவினர்களுக்கு அவன் இறந்த தகவலை போலீசார் தெரிவித்துள்ளார்.

சிறுவனைப் பற்றி நன்கு அறிந்தவராக இருந்தார் என்பதால்தான் அந்த வீட்டில் அந்த பெண்மணியின் பொறுப்பில் சிறுவன் இருந்துள்ளான். இருப்பினும் அந்த சிறுவன் யார், அந்த பெண்மணிக்கும் அவனுக்கும் என்ன தொடர்பு, எப்படி கொலை செய்யப்பட்டான் என்பது உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் மெட் போலீசார் வெளியிடவில்லை. அதே நேரத்தில் சிறுவன் மரணம் தொடர்பாக சந்தேகத்துக்குரிய நபர்கள் என்று வேறு யாரும் தேடப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிறுவனை அந்த பெண்மணி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அதன் அடிப்படையில் அவரை மெட் போலீசார் கைது செய்துள்ளனர். மரணம் தொடர்பாக சிறப்பு துப்பறியும் நிபுணர் குழு விசாரணை நடத்தி வருகிறது.

உடற்கூறு ஆய்வு முடிவுகள் வரும்போது மேலும் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறுவன், அந்த பெண் மணி பற்றி தகவல் தெரிந்தவர்கள் மெட் போலீசாரை தொடர்புகொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk