ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர் எர்ல் கேமரூன் 102 வயதில் காலமானார்

Image courtesy: fandom.com

கருப்பினத்தவராக இருந்தாலும் தொடக்க கா பிரிட்டிஷ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வெற்றிகரமாக நடித்து வந்த எர்ல் கேமரூன் தன்னுடைய 102வது வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

பெர்முடாவில் பிறந்தவரான எர்ல் கேமரூன் தன்னுடைய மனைவியுடன் வார்விக்க்ஷர் கெனில்வொர்த்தில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

எர்ல் கேமரூன் 1939ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வந்து இங்கிலாந்து மெர்சன்ட் நேவியில் இணைந்துள்ளார்.  அதன்பிறகு எர்ல் கேமரூன் கருப்பினத்தவர்கள் அதிகமாக திரைப்படங்களில் தலைகாட்ட முடியாத காலக்கட்டமான 1951ல் பூல் ஆஃப் லண்டன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக நடித்தார். அதன் பிறகு 1965ம் ஆண்டு மிகப் பிரபலமான ஜோம்ஸ் பாண்ட் படமான தண்டர்பால் மற்றும் டாக்டர் ஊ (Doctor Who) படத்திலும் நடித்துள்ளார்.

2009ம் ஆண்டு எர்ல் கேமரூனை கவுரவிக்கும் பொருட்டு கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி பிரிட்டிஷ் எம்பயர் என்ற உயரிய பதவியில் நியமிக்கப்பட்டார். தன்னுடைய திரைப்பட வாழ்வில் நிறவெறி தொடர்பான பல அவமானங்களை சந்தித்தாலும் அதை அவர் வெளியே காட்டிக்கொண்டது இல்லை. அதே நேரத்தில் நிறவெறிக்கு ஆதரவளிக்கும் வகையிலான எந்த ஒரு காட்சியிலும் அவர் நடித்ததும் இல்லை. சிறந்த மனிதர், கடவுள் நம்பிக்கை உள்ளவர், நவீனத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

எர்ல் கேமரூன் மரணம் தொடர்பாக பெர்முடாவின் ப்ரீமியர் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீடில், பெர்முடாவின் அடையாளங்களுள் ஒன்றாக இருந்த நடிகர் எர்ல் கேமரூன் மரணமடைந்துவிட்டார் என்ற தகவல் சோகத்தை ஏற்படுத்துகிறது. பெர்முடா மக்கள் சார்பாகவும் அரசு சார்பாகவும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை அவருடைய மனைவி, பிள்ளைகள், குடும்பத்தாருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.