புனித பால் கதீட்ரலுக்கு குண்டு வைக்கத் திட்டமிட்ட சஃபியா அமிரா ஷேக்கிற்கு ஆயுள் தண்டனை!

St Paul's Cathedral

ஈஸ்டர் பண்டிகையன்று புனித பால் கதீட்ரலில் குண்டு வீசச் சதி திட்டம் தீட்டிய வழிக்கில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளரும் இஸ்லாமுக்கு மதம் மாறியவருமான சஃபியா அமிரா ஷேக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேற்கு லண்டன் ஹேசைச் சேர்ந்தவர் 37 வயதான சஃபியா அமிரா ஷேக். தன் வீட்டுக்கு அருகே வசித்த இஸ்லாமியக் குடும்பம் ஒன்று காட்டிய அன்பு, பாசம் காரணமாக இஸ்லாம் மீது ஈர்ப்பு ஏற்பட்டு மதம் மாறியவர் இவர். ஐ.எஸ் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையின் போது லண்டனில் உள்ள புனித பால் கதீட்ரலில் குண்டு வீச திட்டமிட்டபோது போலீசார் இவரைக் கைது செய்தனர். முன்னதாக அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாகவும் வெடிகுண்டு தயாரிப்பில் தாமதம் ஏற்பட்டதால் அவர் ஈஸ்டர் பண்டிகையின் போது குண்டு வீச தயாரானதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டுவெடிப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்த சஃபியா திட்டமிட்டிருந்தார். கிறிஸ்துமஸ், ஈஸ்டர் பண்டிகையின் போது அதிக அளவில் தேவாலயங்களுக்கு மக்கள் வருவார்கள் என்பதால் அந்த நாளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சஃபியாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய நீதிபதி ஸ்வீனி, “போலீஸ், மற்றவர்கள் எல்லோரும் பொய் சொல்கின்றார்கள் என்று கூறினாலும் அசல் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்தேன். உங்களின் நோக்கம் மிக உறுதியாக இருந்ததை காண முடிந்தது. சஃபியாவுக்கு மனநல பாதிப்பு இருப்பது தெரிகிறது. அவர் பயங்கரவாதிகளுடன் தொடர்புகொண்டு, பயங்கரவாதத்தை பரப்புவதில் அவர் ஆர்வமாக இருந்துள்ளார்” என்றார்.

சஃபியாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதன் மூலம் அவர் 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார். அதன் பிறகு அவரது விடுதலைத் தொடர்பாக பரோல் போர்டு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.