லண்டன்: கிரேன் சரிந்த சம்பவத்தில் 85 வயது பெண்மணி பலி!

கிழக்கு லண்டனில் நேற்று நிகழ்ந்த கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டனின் போ பகுதியில் புதன் கிழமை பிற்பகல் 2.40 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் கிரேன் ஒன்று சரிந்து விழுந்தது. 20 மீட்டர் உயரம் கொண்ட அந்த கிரேன் விழுந்ததில் சில வீடுகள் பலத்த தேசம் அடைந்தன. இதில் நான்கு பேர் காயம் அடைந்தனர். இருவருக்கு லேசான காயம் என்பதால் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இருவருக்கு தீவிர காயம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இடிபாடுகளுக்குள் பலரும் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இதனால் அங்கு மீட்புப் பணிகள் நடந்தன. இதில் 85 வயதான மூதாட்டி ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். அவரது நிலைமையும் கவலைக்குரியதாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 28 வயதான அட்கின்சன் கூறுகையில், “எங்கள் வீடு சேதம் அடைந்துள்ளது. நான், ஹெர்வி, என் அம்மா ஜாக்குலின், ஒரு நாய் என வசித்து வருகிறோம். நல்ல வேலையாக எங்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. புதன் கிழமை திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. விமானம்தான் வந்து வீட்டின் கூரை மீது மோதுகிறதோ என்று பயந்தேன். பின்னர் என்ன பிரச்னை என்று வந்து பார்த்தபோது வீட்டின் மேல் பகுதி முற்றிலும் சேதமடைந்திருந்தது” என்றார்.

இந்த கிரேனை ஸ்வான் அவுசிங் அசோசியேஷன் பயன்படுத்தி வந்துள்ளது. கிரேன் விழுந்தது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள 26 குடும்பங்களைச் சேர்ந்த 97 பேர் தற்காலிகமாக ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் விசாரணை நடத்த, ஆதாரங்கள் சேகரிக்க முக்கியமாக எவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்று அறிய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.