காரில் கொண்டுவரப்பட்ட துப்பாக்கி, தோட்டா… பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமா?

துப்பாக்கி, மெட், Met, Police, ​Firearm, ammunition, recovered

லண்டனில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போது கார் ஒன்றில் இருந்து துப்பாக்கி, தோட்டா கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமா என்ற வகையில் விசாரணை நடந்து வருகிறது.

லண்டனில் துப்பாக்கி, வெடி மருந்து கடத்தப்படுவதாக மெட் போலீசாருக்கு உளவுத் துறை தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

புதன்கிழமை இரவு 10.30 மணி அளவில் மேற்கு ஹாம்ப்ஸ்டெட் பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குற்றப் பிரிவு சிறப்பு நிபுணர்கள், துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் தேடுதல் வேட்டையை நடத்தினர்.

அப்போது அபே சாலையில் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்க அவர்கள் முயற்சி செய்தனர்.

ஆனால், லாவகமாக போலீசார் அந்த காரை மடக்கிப் பிடித்தனர்.

இதில் காரில் இருந்த இளைஞரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவருக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது.

காரில் போலீசார் சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் வெடி மருந்துகள் சிக்கின.

காரின் முன்பக்க சீட்டில் துப்பாக்கியும் வெடி மருந்தும் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 40 வயதான பெண், 27 வயதான ஆண் என இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வடக்கு லண்டன் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து மெட் போலீசின் ஸ்பெஷாலிட்டி கிரைம் சவுத் ப்ரோஆக்டிவ் டீமின் டிடெக்டிவ் சார்ஜெண்ட் வில்லியம் பீல் கூறுகையில், “துப்பாக்கி, வெடி மருந்தைக் கடத்துவதாக உளவுத் துறை மூலமாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. போலீசார், பொது மக்கள் என அனைவருக்கும் இது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதைத் தீவிரமாக நாங்கள் எடுத்துக் கொண்டோம்.

நல்லவேளையாக இந்த சோதனையின் போது பாதுகாப்புத் துறையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்ட நபருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் யார், எதற்காக துப்பாக்கியைக் கடத்தினார்கள், பயங்கரவாதிகள் தொடர்பா என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter