லண்டன்: கஞ்சா அடித்துவிட்டு போலீசை தாக்கிய இந்தியருக்கு சிறை!

(Image: news.met.police.uk)

கஞ்சா அடித்துவிட்டு லண்டன் போலீசை தாக்கிய வழக்கில் இந்தியாவைப் பூர்வீகமாக கொண்டவருக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ரூபர்ட் ஸ்ட்ரீட், டபிள்யூ 1ல் இளைஞர் ஒருநபர் புகைத்துக் கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை அழைத்து விசாரித்தனர். அப்போது அவருடைய பெயர் அக்‌ஷய் பாண்டே என்பதும் அவர் கஞ்சா போதைப் பொருளை தவறாக பயன்படுத்தி வந்தது தெரிந்தது. இதைத் தொடர்ந்து போதைப் பொருள் தடுப்புச் சட்டம் பிரிவு 23ன் கீழ் அவரை கைது செய்தனர்.

ஆனால் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. தன்னை பரிசோதனை செய்ய போலீசாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று முரண்டு பிடித்துள்ளார். அதற்கு போலீசார் சோதனை செய்ய உங்கள் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளனர்.

அடிக்கடி அவர் பாக்கெட்டுக்குள் கைவிட்டபடி இருந்ததால் அவரை சோதனை செய்ய முயன்றனர். அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பது போல கையை தலைக்கு அருகில் வைத்துக்கொண்டார் அக்‌ஷய் பாண்டே. அவரை போலீசார் சோதனையிடத் தொடங்கியபோது, போலீசார் மீது தாக்குதல் நடத்தினார் அக்‌ஷய் பாண்டே.

இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதனால் உடனடியாக கூடுதல் பாதுகாப்புக்கு போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பாண்டேவை தடுத்து நிறுத்தி அவரது கையில் விலங்கு போடப்பட்டது. இந்த போராட்டத்தில் சில்விக் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் விரல் முறிவுற்றது.

அதன் பிறகு அக்‌ஷய் பாண்டே பாக்கெட் சோதனையிட்ட போது அவரது பாக்கெட்டில் கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. தரையில் படுக்க வைக்கப்பட்ட இடத்தில் ஒரு பாட்டலில் போதை மருந்து இருந்தது. அதை பாண்டே காலால் தள்ளி அழிக்க முயன்றார். அதையும் போலீசார் கைப்பற்றினர்.

போதை தெளிந்த பிறகு அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது தன்னுடைய செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். இந்த வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

கடந்த ஐந்தாம் தேதி நடந்த விசாரணையின் போது போதைப் பொருள் பயன்படுத்தியதையும், போலீசார் மீது தாக்குதல் நடத்தியதையும் அக்‌ஷய் பாண்டே ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து அவருக்கு இன்று சிறை தண்டனை வழங்கப்பட்டது. அக்‌ஷய் பாண்டேவுக்கு 12 மாதம் கம்யூனிட்டி ஆர்டர், மூன்று வாரத்துக்கு இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெளியே சுற்றவும் தடை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk