லண்டனில் சிமெண்ட் பிளாக் உள்ளே ஹெராயின் கடத்திய நபர் கைது!

found cement block, ஹெராயின், கடத்தல், போதை மருந்து
(Image: Met Police)

லண்டனில் சிமெண்ட் பிளாக் உள்ளே ஹெராயின் போதை மருந்தை மறைத்து வைத்துக் கடத்திய 32 வயதான நபரை போலீசார் கைது செய்தனர்.

கிழக்கு லண்டனில் டாகென்ஹாமில் சந்தேகத்துக்கிடமான வகையில் கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். காரில் வந்த நபர் சிமெண்ட் பிளாக்கை எடுத்துச் செல்வதாக கூறினார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் காரை பரிசோதனை செய்தனர். அதில் ஏராளமான சிமெண்ட் பிளாக்குகள் இருந்தன.

இந்த சிமெண்ட் பிளாக்குகள் வழக்கத்துக்கு மாறானதாக இருக்கவே, அவற்றை உடைத்து போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது அதன் உள்ளே அரை கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டது தெரியவந்தது.

அந்த காரில் மொத்தம் 48 சிமெண்ட் பிளாக்குகள் இருந்தன. அனைத்திலும் ஹெராயின் போதை மருந்து மறைத்து கடத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து காரில் வந்த 32 வயது மதிக்கத்தக்க நபரை போலீசார் கைது செய்தனர். ஹெராயின் மற்றும் வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இதை படிச்சீங்களா: 4ம் நிலை ஊரடங்கு அமலாகும் 11 கவுன்சில்கள் எவை தெரியுமா?

இது குறித்து மெட்ரோபாலிடன் போலீஸ் ஸ்பெஷலிஸ்ட் கிரைம் கமாண்ட் கமாண்டார் டேவ் மெக்லாரன் கூறுகையில், “போதைக் பொருள் கடத்தல் நடவடிக்கையை போலீசாரிடம் இருந்து மறைக்கக் குற்றவாளிகள் எந்த அளவுக்கும் செல்வார்கள் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

எப்படி அவர்கள் கடத்தினாலும், லண்டன் தெருக்களில் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்துவதில் மெட் போலீஸ் உறுதியாக உள்ளது.

போதைப் பொருட்களைக் கண்டறிவதில் குற்றவாளிகளுக்கு ஒரு படி மேலே நாங்கள் இருக்கிறோம் என்பதை இன்றைய சம்பவம் உறுதி செய்துள்ளது.

போதைப் பொருட்கள் பயன்பாடு நகரத்தில் வன்முறை குற்றங்கள் அதிகரிக்க ஒரு காரணியாக அமைந்துவிடுகிறது. 48 சிமெண்ட் பிளாக்குகளில் இருந்து ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் போதை மருந்து விற்பனை மற்றும் கடத்தல் நெட்வொர்க் சமூக விரோதிகளுக்கு மிகப்பெரிய அடியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter