கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து லண்டனில் திடீர் பேரணி… 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்

​Westminster protest organiser, கொரோனா

லண்டனில் கொரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து நேற்று லண்டனில் திடீர் பேரணி போராட்டம் நடத்தியவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. லண்டனில் புதிதாக 4ம் நிலை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐந்து நாள் கிறிஸ்துமஸ் கால கொரோனா கட்டுப்பாடு தளர்வும் நீக்கப்பட்டுள்ளது.

புதிய வகை வீரியம் மிக்க கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தங்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதை போன்று விழிப்புடன் இருந்து புதிய வைரஸ் தொற்றை சமாளிக்க உதவ வேண்டும் என்று  மெட் ஹென்காக் வலியுறுத்தியுள்ளார்.

அரசு கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள போராடி வரும் சூழலில், கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் சனிக்கிழமை (19ம் தேதி) ஏராளமானோர் திடீர் போராட்டத்தை நடத்தினர்.

10 ஆயிரம் பவுண்ட் அபராதம்…

150க்கும் மேற்பட்டோர் இந்த பேரணி, போராட்டத்தில் பங்கேற்றனர். பேரணியில் வந்தவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினர்.

போலீஸ் எச்சாிக்கையையும் மீறி பேரணி சென்றதால் இதை ஒருங்கிணைத்தவருக்கு 10 பவுண்ட் அபராதம் விதிக்கலாமா என்று மெட் போலீஸ் பரிசீலனை செய்து வருகிறது.

மேலும் போலீசாரின் கோரிக்கையை ஏற்று கலைந்து செல்லாமல் போலீசார் மீது தாக்குதல் நடத்திய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து போலீசார் காயம் அடைந்தனர்.

இந்த 29 பேரில் மூன்று பேர் மீது அவசரக் கால பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது, அவர்கள் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற 26 பேர் மீது சுகாதார விதிமுறைகளை மீறியதற்கான அபராதம் விதிப்பது தொடர்பான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர பேரணியில் பங்கேற்ற மேலும் இருவருக்கும் அபராதத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட் போலீஸ் கமாண்டர் அலெக்ஸ் முர்ரே கூறுகையில், “கொரோனா பரவல் காரணமாக லண்டனில் புதிய கட்டுப்பாடு அமலாவது பற்றிய அறிவிப்பு வெளியாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு இந்த பேரணி, போராட்டம் நடந்தது.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள கொரோனா சுகாதார அவசர நிலை நேரத்தில் இது போன்ற பேரணி, போராட்டம் பொறுப்பற்ற செயலாக அமைகிறது. இந்த சூழலில் தங்காமல் சட்டத்தை நாங்கள் அமல்படுத்துவோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter