சுய தனிமைப்படுத்தலை மீறினால் 10 ஆயிரம் பவுண்ட் அபராதம்! – சுகாதாரத் துறை செயலாளர் எச்சரிக்கை

Matt Hancock
மெட் ஹென்காக் (Image: Twitter / @MattHancock)

லண்டன், 20 செப்டம்பர் 2020: கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதியை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அரசின் எச்சரிக்கையை மீறி பொது மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல், முகக் கவசம் அணியாமல்,

சட்ட விரோத இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கின்றனர். இதனால், மீண்டும் கொரோனா உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இப்போதும் கூட அரசின் விதிகள் தங்களைக் கட்டுப்படுத்துவதாக உள்ளது என்று கொந்தளிக்கும் மக்கள் எண்ணிக்கை மிகப்பெரிய அளவிலேயே உள்ளது.

இந்த நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படுவதைத் தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிபிசி-க்கு சுகாதாரத் துறை செயலாளர் மெட் ஹென்காக் பேட்டி அளித்துள்ளார். அப்போது, “நாடு மிக சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் நம்மிடைய சில தேர்வுகள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றினால், தேசிய அளவிலான முழு ஊரடங்கைத் தவிர்க்க முடியும்.

மீண்டும் ஒரு முழு ஊரடங்கு வருவதை நான் விரும்பவில்லை, அப்படி ஒரு நிலையைக் காணக் கூட நான் விரும்பவில்லை” என்று கூறியுள்ளார்.

புதிய விதிமுறைப் படி கொரோனா சுய தனிமைப்படுத்தல் விதியை மீறி வெளியே வருபவர்கள், நெருக்கமானவர்களைச் சந்திப்பவர்களுக்கு முதலில் 500 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து அடுத்த முறை விதியை மீறினால் 1000 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும். இப்படி அதிகபட்சமாக 10 ஆயிரம் பவுண்ட் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த புதிய விதிமுறைகள் வருகிற 28ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகள், பார்ட்டி நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி நடத்தியது, கடை உள்ளிட்ட உள் அரங்குக்குள் மாஸ்க் அணியாதது உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் அதிக அளவில் மீறி வருகின்றனர்.

இது வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் 19 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அபராத தொகையை செலுத்தவில்லை என்று அரசு வழங்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter