கிழக்கு லண்டனில் அமோக போதைப் பொருள் விற்பனை…  சிக்கிய 14 பேர்!

கைப்பற்றப்பட்ட பணம் (Image: Met Police)

லண்டன், அக்டோபர் 20, 2020: கிழக்கு லண்டனில் இன்று போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் ஏ கிளாஸ் போதைப் பொருளை விற்ற 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து மிகப்பெரிய அளவில் போதை மருந்து மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

போதை மருந்து விற்பனை, சட்ட விரோத செயல் தொடர்பாக கிடைத்த தகவல் அடிப்படையில் லண்டன் டவர் ஹேம்லெட் போலீசார் இன்று அந்த பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 20க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் 6000 பவுண்ட் பணம் மற்றும் 200 பொட்டலங்கள் ஏ கிளாஸ் போதை மருந்து கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 14 ஆண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் 16 வயது சிறுவர்களும் அடக்கம். அவர்களை போலீசார் ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த ஆண்டில் மார்ச் மாதம் முதல் இதுவரை 150க்கும் மேற்பட்ட போதை மருந்து புகாரில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்றைய பரிசோதனையில் சென்ட்ரல் ஈஸ்ட் பேசிக் கமாண்ட் யூனிட், டாஸ்ஃபோர்ஸ் கமாண்ட் மற்றும் உள்ளூர் கேங்க்ஸ் டாஸ்க் ஃபோர்ஸ், மெட் போலீஸ் மோப்ப நாய்கள் பிரிவு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன.

இது குறித்து ஆய்வு நடத்திய டிடெக்டிவ் சூப்பரிண்டெண்ட் மைக் ஹாமர் கூறுகையில், “ஆபரேஷன் கான்டினூம் என்ற பெயரில் போதை மருந்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆபரேஷன் கான்டினூம் வெற்றிகரமான பரிசோதனை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. டவர் ஹேம்லெட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதை மருந்துகள் விற்பனையை ஒடுக்க இது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

குற்றத்தைத் தடுக்க, குறைக்க சரியான ஆதாரத்துடன் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதற்கு உள்ளூர் நகர சபைகளுடன் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியமானது.

தொடர்ந்து குற்றவாளிகளைக் குறிவைப்போம். அவர்களை நீதியின் முன்பு கொண்டுவந்து நிறுத்துவோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter