லண்டன்: கொரோனா கட்டுப்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 150-க்கும் மேற்பட்டோர் கைது!

150 arrests protest, கொரோனா, போராட்டம், London
(Image: twitter.com/ @NewsFromMichiel)

லண்டனில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது தொடர்பாக 150க்கும் மேற்பட்டவர்களை மெட் போலீசார் கைது செய்துள்ளனர்.

இங்கிலாந்தில் முழு ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதி முடிவடைய உள்ள நிலையில், மூன்றடுக்கு கட்டுப்பாடு அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 99 சதவிகித பகுதிகள் நிலை இரண்டு மற்றும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வரும் என்பதால் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் புதிய கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் கிடைப்பது என்பது பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு சவாலானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தன்னுடைய கட்சி எம்.பி-க்களை சமாதானம் செய்யும் முயற்சியில் பிரதமர் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் சனிக்கிழமை (நவம்பர் 28)ம் தேதி மத்திய லண்டனில் கொரோனா புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டது. போலீசார் அனுமதி அளிக்காத நிலையில் இதில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

எச்சரிக்கையையும் மீறி, கொரோனா பாதுகாப்பை பின்பற்றாமல் ஒன்று கூடிய அவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் வலியுறுத்தினர்.

போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கலைந்து செல்லவில்லை. அதற்கு பதில் போலீசார் மீது தாக்குதல் வேறு நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் என 155 பேரை மெட் போலீசார் கைது செய்துள்ளனர். பலருக்கும் அபராத அறிவிப்பு வழங்கப்பட்டது.

இது குறித்து போலீசிங் கமாண்டர் சீஃப் சூப்பரிண்டெண்ட் ஸ்டூவர்ட் பெல் கூறுகையில், “மெட் போலீசுக்கு இது ஒரு சவாலான தினமாக இருந்தது. சிட்டி போலீஸ், பிரிட்டிஷ் டிரான்ஸ்போர்ட் போலீஸ் என அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் தொழில்தர்மத்தை மீறாமல் மிகவும் நேர்மையான முறையில் இதை எதிர் கொண்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமையே போராட்டம் நடத்த அனுமதியில்லை என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். மேலும், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடம் என்று தெரிவித்திருந்தோம்.

சட்டத்தை மீறியவர்கள், பொது மக்களுக்கு இடையூறு செய்தவர்கள், சாலையில் தடையை ஏற்படுத்தியவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter