மீண்டும் கொரோனா அச்சுறுத்தல்: 73 பேருக்கு பாஸிடிவ்… 200 பண்ணைத் தொழிலாளர்களுக்கு குவாரன்டைன்!

மெல்வர்ன் அருகே ஏஎஸ் கிரீன் அன்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 200 தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹியர்ஃபோர்ட்ஷையர் மெல்வர்ன் அருகே உள்ள ஏ.எஸ்.கிரீன் அண்ட் கோ என்ற வேளாண் பொருட்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வருபவர்களில் 73 தொழிலாளர்களுக்கு கோவிட் 19 உறுதியாகி உள்ளது. இன்னும் பலருக்கு பரிசோதனை முடிவு வரவில்லை. இதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அறுவடைக் காலங்களில் பயன்படுத்தப்படும் மொபைல் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் பண்ணைக்கு வெளியே கொரோனாத் தொற்று பரவுவது தடுக்கப்படும் என்று கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு, அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவியிருக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட தொழிலாளர்களுக்கு ஹியர்ஃபோர்ட்ஷையர் கவுன்சில் சார்பில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த பண்ணையில் பிரெட் பீன்ஸ் மற்றும் ரன்னர் பீன்ஸ் வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றனர். இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தொழிலாளர்களே எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். அத்தியாவசிய நேரத்தில் இந்த நாட்டுக்குத் தேவையான உணவு பொருள் கிடைக்க அவர்கள் கடின உழைப்பை வழங்கினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பப்ளிக் ஹெல்த் துறையை தொடர்புகொண்டுள்ளோம். அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். ஹியர்போர்ட்ஷேயர் நிர்வாகம் கொரோனா பரவலைத் தடுக்க அனைத்து நடவடிக்கையையும் எடுத்துள்ளது” என்று கூறியுள்ளது.

உணவு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு வருவது அரசுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் நான்கு உணவு தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த 450க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இவர்களுக்கு ஏற்பட்ட தொற்று சமூகத்துக்கு சென்றுவிடாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக வேறு ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருபவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொது இடங்கள், கடைகளில் மாஸ்க் அணியலாமா வேண்டாமா என்று விவாதம் நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று ஏற்றமும் இறக்குமாக இருந்து வருவதைக் காண முடிகிறது. கொரோனா இறப்புகளும் சப்தமின்றி உயர்ந்து வருகிறது என்பது கவலையை ஏற்படுத்துகிறது.