வெஸ்ட் மிட்லாண்ட்ஸ்: ஒரே நாளில் 28 சட்டவிரோத இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீஸ்

(Image: West Midlands Police)

வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் ஒரே நாளில் 28 சட்டவிரோத இசை நிகழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி 70க்கும் மேற்பட்டவர்களை போலீசார் சுற்றி வளைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா பற்றிய அச்சம் துளியும் இன்றி சட்டவிரோத இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, அதில் திரளாகப் பங்கேற்பது என்று இளைஞர்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த இசை நிகழ்ச்சிகளில் வன்முறை ஏற்பட்டு அதன் காரணமாக கத்திக்குத்து, துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடக்கின்றன. மேலும், இந்த இசை நிகழ்ச்சி மற்றும் இதில் திரளாக பங்கேற்கும் இளைஞர்கள் தொடர்பாக போலீசாருக்கு வரும் புகார்கள் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

ஆகஸ்ட் 8 சனிக்கிழமை அதிகாலை நேரத்தில் பிர்மிங்காமைச் சுற்றிலும் நடந்த 28 சட்டவிரோத இசை நிகழ்ச்சி, சாலையோர கொண்டாட்டங்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக 70க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிக அளவில் இளைஞர்கள் சட்ட விரோதமாக ஒன்று கூடல் நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தொடர்ந்து அதைக் கண்காணிக்க, தடுக்க சிறப்பு ஏற்பாடுகளை வெஸ்ட் மிட்லான்ட்ஸ் போலீசார் செய்திருந்தனர். ட்ரோன் மூலம் இளைஞர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இது தொடர்பாக சூப்பரிண்டென்ட் ஜேக் ஹேட்லி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து இரவு முழுக்க நடந்த நிகழ்வுகளை ட்விட்டர் மூலமாக அவர் பதிவிட்டுக் கொண்டே வந்தார்.

தொடக்கத்தில் 20க்கும் மேற்பட்ட பெரிய பாட்டிகள், ஒன்று கூடல்கள் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பிறகு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட போது இதன் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. இசை நிகழ்ச்சி நடந்துக் கொண்டு வந்த கருவிகள், உணவுப் பொருட்களை போலீசார் கைப்பற்றப்பட்டன. இதனால், கோபத்துடனே இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

இது குறித்து அவர் கூறுகையில், “எங்களின் அர்ப்பணிப்பு மற்றும் அதிகாரிகளின் தீவிர முயற்சி காரணமாக அனுமதியில்லாத 28 ஒன்று கூடல் இசை நிகழ்ச்சிகள் நடத்து நிறுத்தப்பட்டுள்ளன. இது கோவிட் விதிமுறைகளை பின்பற்ற உதவுவதுடன், குற்றங்கள் நடப்பதைத் தவிர்த்து இளைஞர்களை பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் என்று நம்புகிறோம். இது போன்ற நிகழ்ச்சிகள் கொரோனா ஆபத்தை அதிகரிக்கின்றன, பொது மக்களை தொந்தரவு செய்கின்றன” என்றார்.

வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை நடந்த இசை நிகழ்ச்சிகள் தடுக்கப்பட்டுவிட்டன. சனிக்கிழமை இரவு என்ன என்ன கூத்து எல்லாம் நடக்கப்போகிறதோ என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk