15 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவு… டிசம்பரில் அறிமுகம்?

கொரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கும் பழைய படம். (Image: thesun.co.uk)

பதினைந்தே நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் புதிய பரிசோதனை கருவி வருகிற டிசம்பர் இறுதியில் அறிமுகம் ஆகிவிடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா பரவல் இங்கிலாந்தில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா பரிசோதனை அதிக அளவில் எடுக்கப்படுவதைக் காட்டிலும் மிக விரைவாக முடிவுகள் வெளியாக வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

சமீபத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த பிரதமர் போரிஸ் ஜான்சனும் கூட பரிசோதனை முடிவுகள் வெளியாகி, கொரோனா தொற்று நோயாளி மற்றும் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்துவதை மிகவும் விரைவுபடுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் வெறும் 5 பவுண்ட் செலவில் 15 நிமிடங்களில் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் புதிய பரிசோதனை முறை அறிமுகம் ஆக உள்ளதாது.

இங்கிலாந்து அரசுத் துறை உயர் அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக தி சன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெறும் பதினைந்தே நிமிடங்களில் முடிவுகள் தெரிந்துவிட்டால், அவரை உடனடியாக தனிமைப்படுத்த, அவருடன் தொடர்பில் இருந்தவர்களை உடனடியாக அடையாளம் கண்டு அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வது எளிதாகிவிடும்.

மிகப் பெரிய அளவில் ஒன்று கூடல் நடைபெறும் பப், ரெஸ்டாரண்ட், விளையாட்டுப் போட்டிகளிலும் கூட பரிசோதனை செய்துவிட்டு அவர்களை அனுமதிக்க வாய்ப்பு அதிகரிக்கும்.

பரிசோதனை செய்யப்படுபவரின் வாய், தொண்டையில் இருந்து மாதிரியை எடுத்து. பிரத்தியேக ரசாயன கலவையில் கலந்து அதை பிரத்தியேக ஸ்டிக்கில் வைத்தால் கொரோனா உள்ளதா இல்லையா என்பது உறுதியாகிவிடும்.

இந்த புதிய கருவியின் மூலம் பரிசோதனை மேற்கொள்ள ஐந்து பவுண்ட் இல்லை, 15 பவுண்ட் செலவாகும் என்று தி டெலிகிராஃப் இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

எது எப்படியோ மிக விரைவில் கொரோனா உள்ளதா இல்லையா என்பதை உறுதி செய்யும் பரிசோதனை வந்தால் போதும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter