கொரோனா புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து லண்டனில் போராட்டம் – போலீஸ் மீது தாக்குதல்… 60 பேர் கைது!

riot police clash, போராட்டம், லண்டன், கொரோனா
(Image: PA Media)

கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த ஈஸ்டர் வரை தொடரும் என்று வெளியான அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆயிரக் கணக்கானோர் தடையை மீறி போராட்டம் நடத்ததினர். இது தொடர்பாக 60 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொரோனா முழு ஊரடங்கு வருகிற டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு மூன்று அடுக்கு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய மூன்று அடுக்கு கட்டுப்பாடு அடுத்த ஆண்டு ஈஸ்டர் வரையிலும் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பெரும்பகுதி மக்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் வருவதால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இன்று லண்டனில் அரசுக்கு எதிராக பிரம்மாண்ட போராட்டம் நடத்த சேவ் அவர் ரைட்ஸ் யுகே என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. ஒன்றுகூடுதல் என்பது அரசின் விதிகளுக்கு எதிரானது என்பதால் போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி அளிக்கவில்லை.

போராட்டத்தில் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மெட் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனாலும் தடையை மீறி இன்று ஆயிரக் கணக்கானோர் மத்திய லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு சர்க்கஸ், கார்னபி ஸ்ட்ரீட், ரீஜண்ட் ஸ்ட்ரீட் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களைக் கலைந்து செல்லும்படி போலீசார் கேட்டுக் கொண்டனர்.

ஆனாலும் அவர்கள் பேரணியாக சென்று போராட்டம் நடத்தவே, அவர்களைக் கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கினர்.

இதனால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கொரோனா வைரஸ் பரவலே ஒரு நாடகம் என்று குற்றம்சாட்டினர். சுதந்திரமாக மக்கள் வாழ அனுமதிக்க வேண்டும் என்றும், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாது என்றும் கூறினர்.

இனி மேற்கொண்டு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கக் கூடாது என்றும் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து விதிமுறைகளை மீறி ஒன்று கூடலை நடத்தியவர்கள், போலீசார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

போராட்டக்காரர்கள் சாலையின் நடுவே போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை அப்புறப்படுத்தி போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

கொரோனா மூன்று கட்ட ஊரடங்குக்கு ஆளுங் கட்சி எம்.பி-க்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டால் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த சூழலில் லண்டனில் ஏராளமானோர் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter