கொரோனா 2ம் கட்டத்தால் விருந்தோம்பல் துறையில் 90 ஆயிரம் பேர் வேலை இழக்கலாம்!

hospitality jobs
மாதிரி படம் (Image: bbc.com)

எடின்பர்க், 3 செப்டம்பர் 2020: கொரோனா 2ம் கட்ட பரவல் காரணமாக ஊரடங்கு வந்தால் ஸ்காட்லாந்தில் உணவகம் உள்ளிட்ட விருந்தோம்பல் துறையில் மட்டும் 90 ஆயிரம் வேலை இழப்பு ஏற்படலாம் என்று எடின்பர்க் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் கொரோனாத் தொற்று வந்து ஒரு வழி செய்துவிட்டு அடங்கிக் கிடக்கிறது. குளிர் காலத்தில் 2ம் கட்ட அலை ஏற்படும் என்றும் பல ஆயிரக் கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் கொரோனா தொற்று எல்லாம் பெரிய பாதிப்பு இல்லை, அரசு மக்களை ஏமாற்றுகிறது, மக்களை சுதந்திரமாக இருக்க விட வேண்டும் என்று ஒரு கோஷ்டி கம்பு சுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஸ்காட்லாந்தின் எடின்பர்க் பல்கலைக் கழகத்தின் வணிகப் பள்ளி (பிசினஸ் ஸ்கூல்) ஸ்காட்லாந்தின் 5000 நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கையை ஆய்வு செய்துள்ளது.

20 ஆண்டுகளாக நிறுவனங்களின் செயல்பாடு, லாபம், நஷ்டம், அதற்கான காரணங்கள் என்று பல விஷயங்களை அவர்கள் அலசி ஆராய்ந்துள்ளனர்.

2008ம் ஆண்டு பொருளாதார பாதிப்பு, 2009-11 ஐரோப்பிய நிதி பிரச்னை, 2009-10 பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எப்படி எல்லாம் நிறுவனங்களின் செயல்பாடு பாதிக்கப்பட்டுள்ளது என்று ஆய்வு செய்துள்ளனர்.

2019ம் ஆண்டு கணக்குப் படி, உணவகம், சுற்றுலா, பயண ஏற்பாடு உள்ளிட்ட விருந்தோம்பல் துறையில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பணியாற்றி வந்துள்ளனர்.

தற்போது இதில் மிகப்பெரிய அளவில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது 58 ஆயிரம் பேர் இந்த துறையில் வேலைவாய்ப்பை இழந்தனர்.

2ம் கட்ட கொரோனா பாதிப்பில் வேலை இழப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து வணிக பள்ளியின் மேலாண்மை அறிவியல் பிரிவு மூத்த விரிவுரையாளர் கலினா ஆண்ட்ரீவா கூறுகையில்,

எங்களுடைய ஆய்வில் விருந்தோம்பல் சேவைத் துறையைக் காப்பாற்ற அரசு தற்போது எடுத்திருக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் செல்கின்றன என்தை காட்டின.

இருப்பினும் நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களை வழங்க வேண்டும். நிறுவனத்தின் அளவு, பாதிப்பை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter