ஸ்காட்டிஷ் விலங்கியல் பூங்காவில் தீவிபத்து! – விலங்குகள் தப்பின

விலங்கியல் பூங்காவில் தீ விபத்து!

ஸ்காட்லாந்து விலங்கியல் பூங்காவில் இன்று பிற்பகல் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பணியாளர்கள், விலங்குகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று விலங்கியல் பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஜூன் மாத இறுதியில் ஸ்காட்லாந்தின் ஃபைஃப் விலங்கியல் பூங்கா மக்கள் பார்வையிட திறந்துவிடப்பட்டது. மக்கள் கூட்டம் அதிகமாக வரும் ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் விலங்கியல் பூங்கா கட்டிடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. அது வேகமாக பரவவே விலங்கியல் பூங்கா நிர்வாகம் லேடிபேங்க் தீயணைப்பு குழுவினரை அழைத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஒருவருக்கு புகைமூட்டம் காரணமாக பிரச்னை ஏற்பட்டது. இருப்பினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விலங்கியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விலங்கியல் பூங்காவில் தீ விபத்து ஏற்படுவது இதுவே முதன்முறை. உடனடியாக பூங்கா மூடப்பட்டது. அனைத்து தகவலும் உடனுக்குடன் மக்களிடம் பகிரப்பட்டது. எங்களால் முடிந்த வரை அனைத்து விஷயங்களையும் செய்துள்ளோம். இந்த தீவிபத்து காரணமாக மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் நலமாக உள்ளனர்.

இது குறித்து தீயணைப்புத் துறையைச் சேர்ந்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இன்று நண்பகல் 12.11 மணி அளவில் விலங்கியல் பூங்காவில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக குழுவினர் சிறப்பு தீயணைப்பு கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கட்டிடத்தின் கூரை மீது பரவிய தீயை வேகமாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஒருவருக்கு மட்டும் புகைமூட்டம் காரணமான பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். சிறிது நேரத்திலேயே நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது” என்றார்.