கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தவறிய போரிஸ் ஜான்சன் அரசு… ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு!

Boris Johnson, apologises
பிரதமர் போரிஸ் ஜான்சன் (Image: CNN)

கொரோனா பரவல் இந்த அளவுக்கு செல்ல போரிஸ் ஜான்சன் அரசின் செயல்திறன் குறைவுதான் காரணம் என்று முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் குற்றம்சாட்டியுள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கவே, புதிதாக நான்காம் நிலை கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த மாதம் அமலில் இருந்த முழு ஊரடங்கை போன்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் புதிய வீரியம் மிக்க வகை ஒன்று பிரிட்டனில் வேகமாகப் பரவி வருவதே பிரச்னைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன் அரசின் செயல்திறன் குறைவு காரணமாகவே மீண்டும் மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு என்று அறிவிப்பு வருகிறது என்று எதிர்க்கட்சி மட்டும் இன்றி ஆளுங்கட்சி எம்.பி-க்களே கூறுகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரதமரும் லேபர் கட்சித் தலைவருமான கோர்டன் பிரவுன் ரேடியோ 4-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “அரசின் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியிலும், வருத்தத்திலும் உள்ளனர்.

கொரோனா பரவல் தொடர்பாக தினம் தினம் புதுப்புது தலைப்புச் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

கொரோனா சுகாதாரப் பிரச்னையை எதிர்கொள்ளவும், நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார பிரச்னையையும் எதிர்கொள்ள ஒரு நீண்ட கால திட்டத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து சட்டப் பேரவைகள், நாடாளுமன்றம், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு தலைவர்களின் குரல்களை கேட்டு செயல்பட ஒரு வழியை நாம் காணவில்லை.

இங்கிலாந்தின் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அமைப்புகளை கையாளா ஒரு ஒருங்கிணைந்த சரியான வழிமுறைகளை நாம் கையாளவில்லை” என்றார்.

இதற்கிடையே ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர் சார்லஸ் வாக்கர் புதிதாக நான்காம் நிலை கொரோனா கட்டுப்பாட்டை கொண்டுவந்ததன் மூலம் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு சுகாதாரத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் செயலாளர் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் ரேடியோ 4-க்கு அளித்த பேட்டியில், “கொரோனா முழு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் பலன் அளிக்கவில்லை. நம்முடைய பொருளாதாரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. லட்சக்கணக்கானவர்கள் வேலையை இழந்துள்ளனர்.

இந்த சூழலில் ஒட்டு மொத்த அரசும் பதவி விலக வேண்டும் என்று நான் கூறவில்லை. குறைந்தபட்சம் துறை செயலாளர் ஆவது பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter