ஆக்ஸ்ஃபோர்டின் கொரோனா தடுப்பூசி மிகவும் ஆற்றல் மிக்கது! – ஆய்வில் தகவல்

Oxford vaccine protection, கொரோனா, தடுப்பூசி, AstraZeneca, Covid, vaccine
(Image: AFP image)

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்துள்ள ஆஸ்ட்ரா ஜெனகா கொரோனா தடுப்பூசி மிகவும் ஆற்றல் மிக்கதாக உள்ளது என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஃபைசர், பயோஎன்டெக் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு இங்கிலாந்தில் அனுமதி கிடைத்துள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகம் தயாரித்த தடுப்பூசிக்கு இந்த மாதத்துக்குள் அனுமதி கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக தடுப்பூசி ஆற்றல் சற்று குறைவாக உள்ளது என்று முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு டோஸ் அளவில் மாறுதல் செய்தால் அதிக பலன் கிடைக்கிறது என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி அளிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகளை மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டுள்ளது.

முதலில் அரை டோசும் அடுத்த வாரத்தில் முழு டோசும் அளிக்கப்பட்டதில் இந்த தடுப்பூசி 90 சதவிகிதம் அளவுக்கு பாதுகாப்பை கொடுப்பது உறுதியாகி உள்ளது என்று லான்செட் இதழ் தெரிவிக்கிறது.

இது குறித்து ஆஸ்ட்ரா செனெகாவின் தலைமை நிர்வாகி பாஸ்கல் சொரியட் கூறுகையில், “கோவிட் 19க்கு எதிராக எங்கள் தடுப்பூசி பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் யாருக்கும் மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலை வரவில்லை. இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானதாக, நோயைச் சமாளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தடுப்பூசி மருந்துக்கான ஒப்புதலைப் பெற இந்த புள்ளிவிவரங்களை உலகம் முழுவதும் உள்ள மருந்து அனுமதி அளிக்கும் ஆணையங்களுக்கு வழங்கி வருகிறோம்.

அனுமதி கிடைத்ததும் கோடிக் கணக்கான டோஸ் தடுப்பூசி உலகம் முழுவதுக்கும் லாபமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என்றார்.

ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை விட ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி கையாளுவது மிகவும் எளிமையானது. இதற்கு உறைநிலை தட்பவெப்ப பராமரிப்பு தேவையில்லை. அறை வெப்பநிலையிலேயே பராமரிக்கலாம்.

இதனால், உலகம் முழுவதும் கொண்டு செல்வது மிகவும் எளிதாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter