கொரோனா கட்டுப்பாட்டில் 3ம் நிலையை நோக்கி நகரும் பர்மிங்ஹாம்! – ஆக்ஸ்போர்டில் 2ம் நிலை கொண்டு வர ஆதரவு

Birmingham, tier 3, பர்மிங்ஹாம், கொரோனா
(Image: bbc.com/ PA Media)

கொரோனா கட்டுப்பாட்டில் பின்னடைவை சந்தித்ததைத் தொடர்ந்து பர்மிங்ஹாம் 3ம் நிலைக்கும், ஆக்ஸ்ஃபோர்டு 2ம் நிலைக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பர்மிங்ஹாமில் அக்டோபர் 25ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொரோனா தொற்று வீதம் என்பது ஒரு லட்சத்துக்கு 270.9 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கு முந்தைய வாரத்தில் கொரோனா தொற்று விகிதம் ஒரு லட்சத்துக்கு 227.6 ஆக இருந்தது. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதைத் தொடர்ந்து நாட்டிங்ஹாம்ஷையரைத் தொடர்ந்து பர்மிங்ஹாமும் கொரோனா மூன்றாம் நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

“பர்மிங்ஹாம் மூன்றாம் நிலை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் செல்வதை தவிர்க்க முடியாது. ஆனால் அது உடனடியாக நடைபெறாது” என்று நம்புவதாக பர்மிங்ஹாம் சபை தலைவர் இயன் வார்ட் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாமில் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வது தொடர்பாக தன்னுடைய சகாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தினமும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு ஏற்படாமல் 3ம் நிலை கட்டுப்பாட்டை திணிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாம், சாண்ட்வெல், சோலிஹல், வால்சால் மற்றும் வால்வர்ஹாம்டன் ஆகியவை தற்போது 2ம் நிலை கட்டுப்பாட்டில்தான் உள்ளன. மிதமான பாதிப்பு என்ற நிலை ஒன்றில் இருந்த கோவென்ட்ரி சமீபத்தில் நிலை 2க்கு மாற்றப்பட்டது. தற்போது நிலை 1ல் டட்லி உள்ளது. அதுவும் அடுத்த வாரத்தில் 2ம் நிலைக்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆக்ஸ்ஃபோர்டு நகரத்தில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அது தீவிர பாதிப்பு என்ற நிலை 2க்கு செல்ல உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 134.5 என்ற அளவில் தொற்று உள்ளது.

இதைத் தொடர்ந்து ஆக்ஸ்ஃபோர்டில் 2ம் நிலை கட்டுப்பாட்டை அமல்படுத்த வேண்டும் என்று கவுன்சில் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆக்ஸ்ஃபோர்டுஷையர் கவுண்டி கவுன்சிலின் தலைவர் இயன் ஹட்ஸ்பெத், இது மாற்றத்துக்கான சரியான தருணம் என்று கூறியுள்ளார்.

இதை படிச்சீங்களா: 4ம் நிலை கட்டுப்பாடு என்று வந்தாலும் ஆதரிக்க தயார்… லிவர்பூல் மேயர் அறிவிப்பு!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter