பர்மிங்ஹாம்: அதிகாலையில் பயங்கர சண்டை… கத்திக் குத்தில் ஒருவர் பலி – ஏழு பேர் படுகாயம்!

Image: west-midlands.police.uk

பர்மிங்ஹாம், 6 செப்டம்பர் 2020: பர்மிங்ஹாமில் இன்று அதிகாலை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேரும், சாதாரண காயங்களுடன் ஐந்து பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பர்மிங்ஹாம் சிட்டி சென்டர் அருகே இன்று அதிகாலை 12.30 முதல் 2.20 வரை இளைஞர்கள் மத்தியில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் கொல்லப்ட்டதாக வெஸ்ட் மிட்லான்ட்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  இதைத் தொடர்ந்து அதிகாலை நேரத்தில் போலீஸ் படை பர்மிங்ஹாமில் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்தது.

அங்கு ஒருவர் சடலமாகக் கிடந்தார். ஒரு ஆண், ஒரு பெண் என இருவருக்கு பயங்கர கத்திக் குத்து காயம் இருந்தது.

மேலும், ஐந்து பேருக்கு கத்திக்குத்து காயங்கள் இருந்தன. ஆனால், இந்த ஐந்து பேருக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் காயம் ஏற்படவில்லை.

அங்கு விரைந்த மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த பகுதியில் உள்ள சாக்கடையில் இருந்து கத்தி ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக லிவரி தெரு, இர்விங் தெரு மற்றும் ஹர்ஸ்ட் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமரா காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய நிலையில் கொலை விசாரணை நடந்து வருகிறது, இது பற்றி விவரம் தெரிந்தவர்கள் வெஸ்ட் மிட்லான்ட்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பர்மிங்ஹாம் காவல் துறைக்கு பொறுப்பான தலைமை கண்காணிப்பாளர் ஸ்டீவ் கிரஹாம் கூறுகையில், “இன்று அதிகாலை நிகழ்ந்த சம்பவம் துன்பகரமானது, அதிர்ச்சியூட்டும் வகையில் உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சி, மொபைல் வீடியோ காட்சி என எது கிடைத்தாலும் அதை மக்கள் போலீசில் பகிர்ந்துகொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

சம்பவம் நடந்தது பார்கள், கேளிக்கைகளுக்கு பெயர் பெற்ற இடமாகும். அங்கு பெரிய குழுக்களுக்கு இடையே சண்டை நடந்துள்ளது. இதில் உச்சமாக கத்தியை வைத்து தாக்கிக்கொண்டுள்ளனர்” என்றார்.

அங்கு நடந்த சண்டையை நேரில் பார்த்த காரா குர்ரான் என்ற இளம் பெண் கூறுகையில், “அதிகாலை 12.30 மணி அளவில் பணியை முடித்துவிட்டு உடன் பணியாற்றுபவர்களுடன் அங்கு வந்தேன்.

நாங்கள் அங்கு இருந்த போது உரத்த இரைச்சல் மற்றும் குழப்பமான நிலை ஏற்பட்டது. ஏராளமானோர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர்.

பப்புக்குள்ளே சண்டை போட்டவர்கள் பின்னர் வெளியே சென்று சண்டையைத் தொடர்ந்தனர்.

இதில் பெண்கள், ஆண்கள், முதியவர்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் இருந்தனர்.

இரண்டு ஆண்டுகளாக கிளப்களில் பணியாற்றி வருவதால் சண்டைகள் என்பது பார்த்து பழக்கமான ஒரு விஷயமாகத்தான் இருந்தது.

ஆனால், இன்று அதிகாலை நடந்த சம்பவம் மற்ற சண்டைகளைக் காட்டிலும் வித்தியாசமானதாக இருந்தது. கார் கண்ணாடிகள், மற்றும் பல பொருட்கள் உடைக்கப்பட்டன. இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது” என்றார்.

கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அந்த பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பொது மக்கள் விழிப்புடனும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தரும் வகையிலும் இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter