சுவாசப் பிரச்னை… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போல்டன் எம்.பி யாஸ்மின் குரேஷி

Yasmin Qureshi, யாஸ்மின் குரேஷி, நாடாளுமன்ற உறுப்பினர்
யாஸ்மின் குரேஷி (Image: UK Parliament)

மான்செஸ்டர், அக்டோபர் 19, 2020: கிரேட்டர் மான்செஸ்டரின் தென் கிழக்கு போல்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் நிழல் அமைச்சருமான யாஸ்மின் குரேஷி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரேட்டர் மான்செஸ்டரில் கொரோனாத் தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அங்கு மூன்றாம் நிலை கட்டுப்பாடு கொண்டு வர அரசு முயற்சி செய்து வருகிறது.

மூன்றாம் நிலை கட்டுப்பாட்டுக்கு செல்வதாக இருந்தால் கூடுதல் உதவி தேவை என்று கூறி அதற்கு லேபர் கட்சியைச் சேர்ந்த மேயர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் லேபர் கட்சியின் தென் கிழக்கு போல்டன் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும் நிழல் அமைச்சருமான யாஸ்மின் குரேஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு கொரோனாத் தொற்று தென்படவே அவர் சுய தனிமைப்படுத்தலில் இருந்து வந்தார். பரிசோதனையில் கொரோனா உறுதியானது.

இந்த நிலையில் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டதாகவும் அதனால் கடந்த சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக யாஸ்மின் குரேஷி வெளியிட்ட அறிக்கையில், “இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பரிசோதனையில் கொரோனா பாசிடிவ் என்று வந்தது. நானும் என் குடும்பத்தினர்களும் சுய தனிமைப்படுத்தலை மேற்கொண்டோம். நாடாளுமன்றத்துக்கோ வேறு எங்கேயுமோ நான் செல்லவில்லை.

வீட்டில் இருந்தபடி வேலையை கவனித்தேன், காணொலி காட்சி மூலமாக நிகழ்வுகளில் பங்கேற்றேன். இருப்பினும் 10 நாட்களுக்குப் பிறகு உடல் நலம் மிகவும் பாதிக்கப்படவே ராயல் போல்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.

மருத்துவமனையில் எனக்கு சிறப்பான கவனிப்பு வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவ செயல்பாடுகளைக் கண்டு நான் ஆச்சரியம் அடைந்தேன்.

இந்த சிக்கலான நிலையில் பணியாற்றி வரும் ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கூடுதல் உதவி கேட்டு 3ம் நிலை கட்டுப்பாடுகளை கிரேட்டர் மான்செஸ்டரில் அனுமதிக்க லேபர் கட்சி மேயர் மறுத்து வரும் நிலையில், அக்கட்சியின் எம்.பி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பொது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது மக்கள் மிகப்பெரிய பிரச்னையில் சிக்குவதற்கு முன்னதாக ஒரு நல்ல முடிவை அரசும் கிரேட்டர் மான்செஸ்டர் நகர சபை நிர்வாகமும் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter