சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திக் கொண்ட பிரதமர் மற்றும் 6 எம்.பி-க்கள்! – நடந்தது என்ன?

Boris Johnson, self isolating, போரிஸ், கொரோனா
File Photo

கொரோனா சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள தான் அறிவுறுத்தப்பட்டுள்ளதா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அவர் மீண்டும் சுய தனிமைப்படுத்தலை தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாத் தொற்று உறுதியானால் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் செல்ஃப் ஐசோலேஷன் எனப்படும் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ள நேஷனல் ஹெல்த் சர்வீஸ் பரிந்துரைக்கிறது.

அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு, கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி லீ ஆண்டர்சன்னுக்கு கொரோனாத் தொற்று உறுதியானது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மற்றும் ஆறு எம்.பி-க்கள், பிரதமர் அலுவலக உதவியாளர்கள் இருவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட என்.எச்.எஸ் பரிந்துரைத்துள்ளது.

“இரண்டு வாரங்களுக்கு என்னை நானே செல்ஃப் ஐசோலேட் செய்து கொள்ள வேண்டும் என்று என்.எச்.எஸ் தெரிவித்துள்ளது.

நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். எனக்கு எந்த கொரோனாத் தொற்று அறிகுறியும் இல்லை” என்று போரிஸ் ஜான்சன் ட்வீட் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் கட்சி எம்.பி-க்கள் ஆறு பேரை சந்தித்துப் பேசினார். அப்போது போரிஸ் ஜான்சனின் உதவியாளர்களும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்குப் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஆண்டர்சன்னுக்கு சுவை உணர்வில் குறைவு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்தே பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்க என்.எச்.எஸ் பரிந்துரைத்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “சமூக இடைவெளியைப் பின்பற்றியே கூட்டம் நடந்தது. இருப்பினும் நீண்ட நேரம் அந்த சந்திப்பு நடந்தது.

இதனால் தொற்று பரவலுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் சுய தனிமைப்படுத்தலில் இருக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்” என்றார்.

வியாழக்கிழமை நடந்த அந்த சந்திப்பில் 35 நிமிடங்களுக்கு லீ ஆண்டர்சன் பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் இருந்துள்ளார்.

கொரோனாத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ இந்த கால அவகாசம் போதுமானது என்று கூறப்படுகிறது.

யார் யார் சந்திப்பில் இருந்தது?

இந்த சந்திப்பின் போது ஹேவுட் மற்றும் மிடில்டன் எம்.பி கிறிஸ் கிளார்க்சன், தெற்கு ரிப்ளி எம்.பி கேத்ரின் பிளெட்சர், வாரிங்டன் தெற்கு எம்.பி ஆண்டி கார்ட்டர், கிரேட் கிரிம்ஸ்பி எம்.பி லியா நிசி, பாசெட்லா எம்.பி பிரெண்டன் கிளார்க் ஸ்மித் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பின் போது உடன் இருந்த போரிஸ் ஜான்சனின் உதவியாளர்கள் இருவரின் பெயரை வெளியிட பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.

இங்கிலாந்தில் கொரோனா ஊரடங்கை கொண்டு வந்ததில் தவறான புள்ளிவிவரம் அளிக்கப்பட்டு தான் ஏமாற்றப்பட்டதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதியதாக செய்தி வெளியானது. தற்போது அவரே மீண்டும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter