கொரோனா முழு ஊரடங்கு வருவது தடுக்கப்படும் என நம்புகிறேன்… கிலியை ஏற்படுத்தும் போரிஸ் ஜான்சன்

Boris Johnson, self isolating, போரிஸ், கொரோனா
File Photo

இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பரவல் முழு ஊரடங்கு வருவது தடுக்கப்படும் என நம்புவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு தற்போது இருக்கும் சூழலில் மீண்டும் முழு ஊரடங்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதற்கு ஏற்றார்போல இங்கிலாந்தில் ஒன்றுக்கு கீழ் குறைந்திருந்த கொரோனா பரவல் ஆர் நம்பர் மீண்டும் ஒன்றுக்கு மேல் சென்றுள்ளது.

கொரோனா காரணமாக லண்டன் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் சென்றுவிட்டன. பெட்ஃபோர்ட்ஷையர், பக்கிங்ஹாம்ஷையர், பெர்க்க்‌ஷையர், ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் ஆகியவை நாளை நள்ளிரவு 00.01 முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் செல்கின்றன.

வருகிற 26ம் தேதி முதல் வடக்கு அயர்லாந்தில் ஆறு வாரக் காலத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் இங்கிலாந்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒப்புக் கொண்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டு வருவது தடுக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கிறிஸ்துமஸ் சமயத்தில் டிசம்பர் 23 முதல் 27ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு வழங்கிய அதிகபட்ச சலுகையாகும்.

மக்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நம்முடைய வீட்டில் உள்ள வயதானவர்கள், கொரோனா தொற்று அபாயம் உள்ளவர்களை நினைத்துப் பார்த்துத் தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டும்” என்றார்.

முன்னதாக கிறிஸ்துமஸ் கால தளர்வு தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையை தன்னடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

அந்த ட்வீட் பதிவில், “கிறிஸ்துமஸ் சமயத்தில் நெருக்கமானவர்களை சந்திக்கச் செல்வது என்று முடிவெடுத்துவிட்டால், இப்போது இருந்தே வீட்டுக்கு வெளியே மற்றவர்களை சந்திப்பதை குறைத்துக்கொள்ளுங்கள்.

இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் நாம் ஒவ்வொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நம்முடைய நெருக்கமானவர்களுக்கு பரவுவதைத் தடுக்கும் கடமை உள்ளது” என்று கூறியிருந்தார்.

அரசு கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று லேபர் கட்சி குற்றம்சாட்டி வருகிறது.

இந்த சூழலில், மீண்டும் தேசிய முழு ஊரடங்கை நோக்கியே அனைத்து நகர்வும் இருப்பதாக அரசு வட்டாரங்கள் கூறுவது சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter