கடும் வறுமையை எதிர்நோக்குகிறதா பிரிட்டன்? ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

britain ahead poverty due to corona virus covid19

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, பிரிட்டனில் கடும் வறுமை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடான பிரிட்டனில் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு, 41 ஆயிரத்து, 903 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதில், 4,313 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டின் பிரதமர், போரிஸ் ஜான்சன், இளவரசர் சார்லஸ் உள்ளிட்டோரையும், இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்த பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், பிரிட்டனில், பொருளாதார பாதிப்பு அதல பாதாளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்ட இங்கிலாந்து நபர் – நெகிழ்ச்சியில் கண் கலங்கிய மருத்துவக் குழு

இது குறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளதாவது: கடந்த, 2008ல் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை, பிரிட்டனில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நாட்டில், 1.4 கோடி மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். அதில், 42 லட்சம் பேர் குழந்தைகள். அதாவது மொத்த மக்கள் தொகையில், நான்கில் ஒரு பங்கு மக்கள், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில், 30 சதவீத குழந்தைகள் வறுமையில் உள்ளனர். கடந்த, 15 நாட்களில் மட்டும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பொருளாதார பாதிப்பில் சிக்கி தவிப்பதாக, அரசிடம் உதவி கேட்கும், ‘யூனிவர்சல் கிரெடிட்’ பட்டியலில் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இது வழக்கத்தைவிட, 10 மடங்கு அதிகம். வறுமை கோட்டுக்கு கீழுள்ள ஏழை குழந்தைகளுக்கு, பள்ளிகளில் உணவு வழங்கப்படுகிறது. தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், இந்த உணவு திட்டத்துக்கு நன்கொடை அளிப்பது, தற்போது குறைந்துள்ளது.

ஊரடங்குக்குப் பிறகு, தங்களுடைய பொருளாதார நிலை எப்படி இருக்கும் என்ற அச்சத்தில், நன்கொடை அளிப்பதை பலர் நிறுத்தியுள்ளனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பைவிட, அது தணிந்து, ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்ட பிறகு, நாடு எதிர்நோக்கும், பொருளாதார பிரச்னைகளே முக்கியமான பிரச்னையாக இருக்கும். பலர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும். அந்த நிலையில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோரின் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது. இதில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் பலர் செல்வதை தடுப்பதுடன், அந்தப் பிரிவில் ஏற்கனவே உள்ளவர்களை கவனிக்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு உள்ளது. பொருளாதார பாதிப்பு கடுமையாக இருக்கும் நிலையில், அது, கொரோனா சவாலைவிட மிகப் பெரிய சவாலாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

பிரிட்டனில், நேற்று ஒரே நாளில், 708 பேர் உயிரிழந்துள்ளனர். அதில், 5 வயது குழந்தையும் அடங்கும். இந்த வைரசுக்கு பலியான, மிகக் குறைந்த வயதுடைய குழந்தை இது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின், 55, காதலியான, கேரி சைமண்ட்ஸ், 32, தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்குப் பிறகு, உடல்நிலை தேறி வருவதாக, டாக்டர்கள் கூறியுள்ளனர்.

(Source: Dhinamalar)