பிரக்ஸிட் வெளியேற்றத்தை கொண்டாட பிரிட்டன் திட்டம் – பிரக்ஸிட் என்றால் என்ன தெரியுமா?

Britain Tamil News: ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் இந்த மாதம் 31-ஆம் தேதியுடன் வெளியேறுவதையொட்டி (பிரெக்ஸிட்) நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, நிதியமைச்சா் சாஜித் ஜாவித் செய்தியாளா்களிடம் கூறுகையில்,

“இந்த மாத இறுதியில் பிரெக்ஸிட் நிறைவேறுவதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். எனினும், புதிய விதிமுறைகளின் கீழ் ஐரோப்பிய நிறுவனங்களுடன் பிரிட்டன் நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியாமல் போகும். இதனால், சில துறைகளுக்குப் பாதிப்பு ஏற்படும்.

பிரிட்டன் அரச குடும்பத்தில் வியக்க வைக்கும் தனி நபரின் வருமானம்

நமது சந்தை முன்பைப் போல ஐரோப்பிய பொதுச் சந்தையாக இல்லாமல் தனிச் சந்தையாக மாறும். நமது சந்தைக்கு பிற நாடுகள் விதிமுறைகள் வகுக்க முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நிலை ஏற்படுத்தப்படும் என்றாா்.

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறுவதற்கு வரும் டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி கெடு விதிக்கப்பட்டுள்ளது.

பிரெக்ஸிட் என்றால் என்ன?

Britain Exit என்பதன் சுருக்கமே Brexit. பிரிட்டன் வெளியேறுதல் என்பதே இதன் அர்த்தம். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான விஷயம் என்பதால் இந்தச் சொல் இதில் பயன்படுத்தப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் என்பது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள 28 நாடுகள் சேர்ந்த ஒரு அமைப்பு ஆகும். இதில் ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளோடு, பிரிட்டனும் ஒரு உறுப்பு நாடாக உள்ளது. அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளுக்காக இந்த ஒன்றியம் ஏற்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனி நாடாளுமன்றம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 19 நாடுகள் யூரோவைப் பொதுப் பணமாகப் பயன்படுத்துகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் புதிய குடியேற்ற மக்களை வரவேற்கின்றன. ஆனால், பிரிட்டனின் சில தலைவர்கள், புதிதாகக் குடியேறும் மக்களால், தங்களது கலாசாரம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகக் கருதினர். இதனால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான ஒரு வாக்கெடுப்பு, 2016 ஜூனில் பிரிட்டன் மக்களிடையே நடத்தப்பட்டது. இதில் 71 புள்ளி 8 சதவீத மக்கள் கலந்து கொண்டனர். அவர்களில் 51.9% மக்கள் பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக, அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

கல்விக்கான சிறந்த நாடுகள் பட்டியலில் பிரிட்டன் இரண்டாமிடம் – முதலிடம் யாருக்கு தெரியுமா?