கொரோனா பாதிப்பு – குழந்தை பெற்று உயிரிழந்த பிரிட்டன் செவிலியர்

britain tamil news, latest uk tamil news, corona in uk, பிரிட்டன் தமிழ் செய்திகள்

பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியரான ஒரு நிறைமாத கர்ப்பிணி, அறுவைச் சிகிச்சை மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுத் தந்துவிட்டு உயிரிழந்தார்.

இறந்த செவிலியருக்கு வயது 28 தான். பிரிட்டன் நல்வாழ்வுத் துறையில் செவிலியராக சேவையாற்றி வந்த இவர் நிறைமாத கர்ப்பிணியும்கூட.

இங்கிலாந்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 861 பேர் பலி

மருத்துவப் பணியாற்றி வந்த இவர், கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவருடைய உடல்நிலை ஓரளவு நன்றாக இருப்பதைப் போலத் தோன்றியதால் எப்படியும் தேறிவிடுவார் என்று டாக்டர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் இருந்தனர்.

ஆனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடையத் தொடங்கியது.

இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுக்க இனி வாய்ப்பில்லை, அந்த செவிலியரின் நிலையும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது என்ற நிலையில் உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்து குழந்தையைக் காப்பாற்றிவிடுவதென டாக்டர்கள் முடிவெடுத்தனர்.

உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. செவிலியர் பெற்றெடுத்தது ஒரு பெண் குழந்தை. பின்னர் சிறிது நேரத்தில் செவிலியரின் உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

செவிலியரின் உயிர் எப்போது பிரிந்தது, அறுவைச் சிகிச்சையின்போதே பிரிந்துவிட்டதா, தன்னுடைய பிஞ்சு மகளை அந்தச் செவிலியரால் பார்க்க முடிந்ததா, பார்க்கக் கூடிய நிலையில் அவர் இருந்தாரா, என்பது பற்றிய விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்பது பற்றியும் உறுதி செய்யப்படவில்லை.

இந்தியா அனுப்பிய பாராசிட்டமால் மாத்திரை மருந்தகங்களில் கிடைக்கும் – பிரிட்டன் அரசு

பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றுக்கான போராட்டத்தில் இதுவரையிலும் சுமார் 30 செவிலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

அனைவருக்கும் போதுமான அளவுக்குத் தற்காப்பு அணிகலன்கள் தேவை என்று மருத்துவப் பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். முகக் கவசங்கள், மருத்துவ அங்கிகளைக்கூட பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலையிலிருக்கிறார்கள்.

மருத்துவப் பணியாளர்கள் ஒவ்வொருவரின் மரணம் பற்றியும் விரிவாக விசாரித்தறியப்படும் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேட் ஹன்காக் உறுதியளித்துள்ளார்.