பிரிட்டனில் 51 ஆயிரத்தை கடந்த பாதிப்பு எண்ணிக்கை – ராணி எலிசபெத் உருக்கம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், ராணி எலிசபெத் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.

தனது 69 ஆண்டு கால ஆட்சியில் 5 வது முறை தொலைக்காட்சியில் தோன்றி ராணி எலிசபெத் பேசினார். அப்போது, முந்தைய தலைமுறையினரைப் போல மக்கள் துணிவுடன் இருக்க வேண்டும் என்றார். இவர் பருவ வயதில் இருந்தபோது 2ஆம் உலகப் போர் நடந்தது. அப்போது வெளியான பாடலில், ”வீ வில் மீட் அகெய்ன், வீ வில் ரிடர்ன்” என்ற பாடல் வெளியானது. அந்தப் பாடல் வரியை நேற்றும் தனது நாட்டு மக்களிடம் பேசும்போது உருக்கமான குரலில் குறிப்பிட்டார்.

ஐசியு-வில் அனுமதிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் – உடல்நிலை மோசம்

வின்ட்சர் அரண்மனையில் தனது 98 வயதான கணவர் பிரின்ஸ் பிலிப்புடன், 93 வயதான ராணி தற்போது தங்கி வருகிறார். அங்கிருந்துதான் தனது நாட்டு மக்களுக்கும் உரையாற்றினார்.

அப்போது, ”நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும். ஒற்றுமையுடன் செயல்பட்டால், இதில் இருந்து நாம் எளிதில் வெளியே வரலாம். இதற்கு முன்பும் சவால்களை சந்தித்து உள்ளோம். ஆனால், அவை வேறு மாதிரி இருந்தன. இது வேறு. உலக மக்களுடன் இணைந்து, மேம்பட்ட அறிவியல் அறிவுடன் இந்த சவாலை எதிர்கொள்வோம். நாம் வெற்றியடைவோம். இந்த வெற்றி நம்மில் ஒவ்வொருவருக்கும் சொந்தமாகட்டும்.

எவ்வாறு முந்தைய தலைமுறையினர் இரண்டாம் உலகப் போரை தைரியத்துடன் சந்தித்தனரோ அதேபோல், இந்த தலைமுறையினரும் இந்த நோயை எதிர்கொள்ள வேண்டும்” என்றார்.

பிரிட்டனில் 51,608 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,373 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் பத்து லட்சம் பேருக்கு, 73 ஆக அந்த நாட்டில் இருந்து வருகிறது.

135 பேர் மட்டுமே இதுவரை சிகிச்சை பலனளித்து குணமடைந்துள்ளனர்.