விமானத்தில் புகை? அவசரமாகத் தரை இறங்கிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்!

மாதிரி புகைப்படம் (Image: ALAN WILSON•CREATIVE COMMONS)

லண்டன், அக்டோபர் 21, 2020: லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து இத்தாலி நோக்கி புறப்பட்ட விமானம் புறப்பட்ட விமானம் சில நிமிடங்களில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று காலை லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து இத்தாலியின் வெரோனாவுக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் BA2596 புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் பயணிகளுக்கு விமானத்தில் ஏதோ எரிந்ததால் ஏற்பட்டது போன்ற புகை வாசனை வந்துள்ளது.

விமானத்தின் சிப்பந்திக்கும் திடீரென்று உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு விமானம் அவசர அவசரமாக லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக தரைக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் உடனடியாக டெர்மினல் ஐந்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டால் எதிர்கொள்ள, தீவிபத்து நடந்தால் அதை அணைக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன.

விமானம் ரன்வேயில் இறங்கி டாக்ஸிவேக்கு வரும் வரை தீயணைப்பு வண்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த வீடியோவை வெளியிட்ட விமான பயணி, “அது மிக நீண்ட 10 நிமிடங்கள்… விமானத்தின் உள்ளே புகைந்த நாற்றம் வீசியதாலும், திடீரென்று சிப்பந்தி ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாலும் தரையிறக்கப்பட்டது” என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “எங்கள் பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளின் பாதுகாப்பு எங்களுக்கு எப்போதும் மிக முக்கியம்.

சிறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு காரணமாக விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பயணிகளுக்கு உடனடியாக மாற்று விமானம் ஏற்பாடு செய்து தரப்பட்டது. அவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter