விதிகளை மீற துடிக்கும் மக்கள்… கொரோனா கட்டுப்பாடு பலன் அளிக்குமா?

Covid rules, கொரோனா, UK corona cases
நியூகேஸிலில் இரவு 10 மணிக்குப் பிறகு சாலையில் கூடியிருந்த மக்களை அப்புறப்படுத்தும் போலீஸ் (Image: North News and Pictures)

விதிகளை மீறுவதில் மக்கள் அதிக விருப்பமாக உள்ளதால் கொரோனா கட்டுப்பாடு பலன் அளிக்கப்போவது இல்லை என்று நிபுணர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நாடு முழுக்க கொரோனா பரவலைத் தவிர்க்க மூன்று நிலை கட்டுப்பாடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை அடிப்படையில் அதி தீவிரம், தீவிரம், மிதமான பகுதிகள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலை கட்டுப்பாடு ஒரு பகுதியில் அமல்படுத்தப்படும் போது சாலைகளில் அதிக அளவில் மக்கள் கூடி கடைசி நாளை கொண்டாடுகின்றனர்.

ஏற்கனவே தொற்று அதிகமாக இருப்பதால்தான் கட்டுப்பாடு கொண்டு வரப்படுகிறது.

அப்படி இருக்கும் போது கொரோனா தொற்று உள்ளவர்கள், இல்லாதவர்கள் என அனைவரும் ஒன்று கூடிக் கொண்டாடுவது வைரஸ் பரவலை அதிகரிக்கவே செய்கின்றன.

2ம் நிலை கட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இரவு 10 மணிக்கு பப்கள், பார்கள் மூடப்படுகின்றன.

10 மணிக்கு பிறகும் தெருக்களில் அமர்ந்து மது அருந்துவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. அவர்களை அப்புறப்படுத்த போலீசார் படாதபாடு படுகின்றனர்.

லண்டனில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் ஏராளமானவர்கள் திரண்டு மது அருந்திக் கொண்டாடினர். முதல் நிலை பரவலின் போது கட்டுப்பாடு கொண்டு வரப்பட்ட போது மக்கள் ஒத்துழைப்பு அளித்தனர்.

ஆனால், 2ம் நிலை பரவலின் போது கட்டுப்பாடுகளுக்கு கீழ்ப்படிய மக்கள் தயாராக இல்லை. விதிமுறைகளை மீற தயாராக உள்ளனர். துணிந்து மீறுகின்றனர். இதுவும் 2ம் பரவலில் பாதிப்பை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

யு.கே-வில் இதுவரை 8,30,998 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 44,571 பேர் உயிரிழந்துள்ளனர். செப்டம்பர் மாதத்தில் இருந்து தொற்று நோய் உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தடுப்பூசி டிசம்பருக்குப் பிறகுதான் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மக்கள் விதிமுறைகளை மீறுவதில் உறுதியாக உள்ளதால், தற்போதைய கட்டுப்பாடுகள் பலன் அளிக்காது. இதை கடுமையாக்க வேண்டும் என்று தொடர்ந்து பரிந்துரைகள் அரசுக்கு செய்யப்பட்டு வருகின்றன.

மக்கள் மிகப் பெரிய அளவில் கோபத்தில் உள்ளதாலும், பொருளாதார பாதிப்பை கருத்தில் கொண்டும் அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

அரசு சொல்வதை கேட்க வேண்டும் என்பதை விட, மக்கள் சூழல் உணர்ந்து தங்கள் சுய அறிவை பயன்படுத்தி எது சரியானது என்று முடிவெடுத்து நடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter