கிறிஸ்துமஸ் கொரோனா கட்டுப்பாடு தளர்வு பல உயிர்களை பலி வாங்கிவிடும்… மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை!

Christmas rules cost, கொரோனா
(Image: Henry Nicholls / Reuters)

இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கொரோனா கட்டுப்பாடு தளர்வு வழங்கப்படுவது பல உயிர்களை பலி வாங்கும் மோசமான முடிவு என்று மருத்துவ இதழ்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்தில் மூன்று நிலை கட்டுப்பாடு உள்ளது. லண்டன் உள்ளிட்ட பகுதிகள் நாளை முதல் மூன்றாம் நிலை கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்கின்றன.

இதன் மூலம் லண்டனில் உள்ள லட்சக் கணக்கான மக்கள் மற்றும் ஹெர்ஃபோர்ட்ஷையர், எசெக்ஸ் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடினமான கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி டிசம்பர் 23 முதல் 27ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் வழங்கப்படுகின்றன. இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் முன்னணி மருத்துவ இதழ்கள் கிறிஸ்துமஸ் தளர்வு பற்றி கட்டுரை வெளியிட்டுள்ளன.

தி ஹெல்த் சர்வீஸ் ஜர்னல் மற்றும் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆகியவை கொரோனா கட்டுப்பாடு தளர்வு என்பது மக்களின் பாதுகாப்பை கைவிடுவதற்கு சமம் என்று குறிப்பிட்டுள்ளன.

மேலும், “அரசாங்கம் பல உயிர்களை இழக்கும் மற்றொரு மிகப்பெரிய பிழையைச் செய்யப் போகிறது என்று நம்புகிறோம்.

என்.ஹெச்.எஸ்-ன் தேவை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. புதிதாக பரவி வரும் வைரஸ் வேறு பல ஆபத்துக்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசியல் தலைவர்கள் விரைவான மற்றும் தீர்க்கமான முடிவுகளை எடுக்கத் தவறினால் அவர்கள் இனி என்.ஹெச்.எஸ்-ஐ பாதுகாப்பதாக கூற முடியாது” என்று தெரிவித்துள்ளன.

நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ இதழ்கள் என பல தரப்பினரும் கிறிஸ்துமஸ் கால தளர்வை விமர்சித்து வருகின்றன. அமைச்சரவை கூடி விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று லேபர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

எனவே, கொரோனா கட்டுப்பாடு தளர்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், டிசம்பர் 23 முதல் 27ம் தேதி வரை விதிகள் தளர்த்தப்பட்டாலும் மக்கள் எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்று பிரதமரின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter