இரவு 10 மணிக்கு பப் மூடும் முடிவை மறு பரிசீலனை செய்க! – அரசுக்கு மான்செஸ்டர் மேயர் கோரிக்கை

இரவு 10 மணிக்கு மேல் லண்டன் சாலையில் திரண்டிருந்த மக்கள்! (Image: Twitter)

மான்செஸ்டர், செப்டம்பர் 28, 2020: இரவு 10 மணிக்கு பப்களை மூடும் முடிவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதை விட அதிகரிக்கச் செய்யும் வகையில் உள்ளதால், அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசுக்கு மான்செஸ்டர் மேயர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இரவு 10 மணிக்கு உணவகங்கள், பார்கள், பப்கள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால், வார இறுதி நாட்களில் இரவு 10 மணிக்கு மேல் பப்கள் மூடப்பட்டதால் பப்களுக்கு வெளியே ஆயிரக் கணக்கான இளைஞர்கள் திரண்டு சமூக இடைவெளி விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு, கொரோனா தொற்று பரவலுக்குத் துணைபுரிந்தது அதிர்ச்சி அளித்தது.

லண்டன் மட்டுமின்றி லிவர்பூல், யார்க் என எல்லா நகரங்களிலும் உள்ள பப்களின் வாசலிலும் இப்படி இளைஞர்கள் திரண்டு நின்று கொரோனா கட்டுப்பாடுகளை கேலிக்கூத்தாக்கினர்.

இது குறித்து கிரேட்டர் மான்செஸ்டரின் மேயர் ஆண்டி பர்ஹாம் கூறுகையில், “பார்கள் மூடப்பட்டதும் வீடுகள், சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிக அளவில் ஒன்று கூடினர்.

யார்க், லிவர்பூல் உள்ளிட்ட நகரங்களில் உள்ள பார்கள், பப்களுக்கு முன்பு ஒன்று கூடிய மக்களின் புகைப்படங்கள் பல வெளியாகி உள்ளன. இவை கவலை அளிக்கின்றன.

எதற்காக ஊரடங்கு விதிமுறைகள் கொண்டு வரப்பட்டனவோ, அதற்கு எதிரானத் தோற்றத்தையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. இந்த கட்டுப்பாடுகள் நல்லதை செய்வதைக் காட்டிலும் பாதிப்பையே ஏற்படுத்தும்.

எனவே, நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தேவை அவசரமாக ஏற்பட்டுள்ளது என்பதை இவை காட்டுகின்றன” என்று கூறினார்.

லிவர்பூல் மேயர் ஜோ ஆண்டர்சன் கூறுகையில், “இரவு 10 மணிக்கு பப்களை மூடுவது தற்போதைய சூழலை மேலும் மோசமாக்குகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பலரும் வார இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகள் பற்றி கவலை தெரிவித்து வருகின்றனர். கவலைப் பட வேண்டிய பொது மக்கள் அது பற்றி யோசித்ததாக தெரியவில்லை!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter