கட்டுப்பாடுகளை மீறி அதிகரிக்கும் கொரோனா… ஒரே நாளில் 35,200!

கொரோனா, Covid, R number fallen
(Image: telegraph.co.uk)

யு.கே-வில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்த நிலையில் தற்போது ONS கணக்கீட்டின்படி ஒரே நாளில் 35,200-க்கும் மேற்பட்டோருக்கு பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுனைட்டட் கிங்டம் முழுவதும் கொரோனாத் தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இங்கிலாந்தில் ஒரே நாளில் 35,200 தொற்று உறுதியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

முதியவர்கள் மட்டுமின்றி, இளைஞர்கள், பதின் பருவ வயதினர் என அனைவர் மத்தியிலும் தொற்று அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில் இவ்வளவு உறுதியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

அக்டோபர் 16ம் தேதியை ஒட்டிய வாரத்தில் இங்கிலாந்தில் சாலையில் 130 பேர் நடந்தால், அதில் ஒரு கொரோனா நோயாளியும் இருந்திருப்பார் என்று தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இதுவே வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்தில் 180க்கு ஒன்று என்ற அளவிலும் வடக்கு அயர்லாந்தில் 100க்கு ஒருவர் என்ற அளவிலும் இருந்ததாக அது தெரிவிக்கிறது.

இங்கிலாந்தின் வட மேற்கு மற்றும் வட கிழக்குப் பகுதிகளில் உச்சபட்ச தொற்று உள்ளது. அக்டோபர் 10 முதல் 16 வரையிலான நாட்களில் தினமும் சராசரியாக 35,200 புதிய தொற்றுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது முந்தைய வாரத்தில் 27,900 ஆக இருந்தது.

ஒவ்வொரு நாளும் இங்கிலாந்து அரசு வெளியிடும் ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகங்கள் வெளியிடும் தகவலுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அரசு வெளியிட்ட கணக்குப் படி வியாழக்கிழமை 21,242 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. 189 பேர் உயிரிழந்துள்ளனர்.

தேசிய புள்ளிவிவரங்கள் அலுவலகத்தின் கணக்கு என்பது ரேண்டமாக வீடுகளில் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் உள்ளதா இல்லையா என்ற கணக்கெடுப்பின் அடிப்படையில் அமைந்திருக்கின்றன.

முழு ஊரடங்கு கொண்டு வரும் எண்ணம் இல்லை என்று பிரதமர் தெரிவித்துள்ளார். மக்கள் கட்டுப்பாடுகளை மதித்து நடந்து கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவரும் மனநிலையில் இல்லை.

அரசும் மக்களும் எட்டிக்குப் போட்டியாக செயல்பட்டு வருவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter