கொரோனா புதிய கட்டுப்பாடு இரண்டு மாதங்களுக்கு மட்டும்தான்! – தன் கட்சி எம்.பி-க்களிடம் பிரதமர் உறுதி!

Prime Minister, Boris Johnson, Covid tiers finish
(Image: Andrew Parsons/AP)

புதிய மூன்றடுக்கு கொரோனா கட்டுப்பாடு இரண்டு மாதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என்று தன்னுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்துள்ளார்.

கொரோனா முழு ஊரடங்கு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. அதைத் தொடர்ந்து மூன்றடுக்கு கட்டுப்பாடுகள் அமலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று லண்டனில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

கட்டுப்பாடுகள் கொண்டுவராவிட்டால் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

புதிய விதிமுறைக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டியது அவசியம். ஆளும் கட்சிக்குள் அதிருப்தி நிலவுவதால் மூன்றடுக்கு ஊரடங்குக்கு எம்.பி-க்களின் ஆதரவு கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படுகிறது.

முழு ஊரடங்குக்கு ஆதரவு தெரிவித்த லேபர் கட்சி, இந்த மூன்றடுக்கு கட்டுப்பாட்டில் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து தன்னுடைய கட்சியின் அதிருப்தி எம்.பி-க்களின் ஆதரவைப் பெறும் முயற்சியில் பிரதமர் போரிஸ் ஜான்சன் இறங்கியுள்ளார். கட்டுப்பாடு ஏன் அவசியம் என்பதை வலியுறுத்தி அவர் எம்.பி-க்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், “கொரோனா கட்டுப்பாடுகள் டிசம்பரில் தளர்வுகள் வழங்கலாம். ஜனவரியில் புதிதாக வாக்கெடுப்பு நடத்தலாம். பிப்ரவரி 3ம் தேதியுடன் மூன்றடுக்கு கட்டுப்பாட்டை முடித்துக் கொள்ளலாம்.

டிசம்பர் 2ம் தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை கட்டுப்பாடுகள் பற்றி ஆய்வு செய்து தளர்வுகள் வழங்கலாம். முதல் ஆய்வு டிசம்பர் 16ம் தேதி நடத்தப்படும்.

வரும் ஈஸ்டர் காலத்தில் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்ப இந்த நடவடிக்கைகள் தேவை” என்று கூறியுள்ளார்.

பொது மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “புதிய மூன்றடுக்கு கட்டுப்பாடு, கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி வழங்குதல் ஆகியவற்றில் பொது மக்கள் இணைந்து செயலாற்ற வேண்டும்.

தற்போதைய சூழலை நாம் ஊதி ஒதுக்கிவிட முடியாது. சுதந்திரம் என்ற ஒன்றைவைத்து இதைத் தூக்கித் தூர எறிய முடியாது.

நாம் அனைவரும் மிகக் கடினமாக உழைத்துள்ளோம். பலவற்றை இழந்துள்ளோம். பல தியாகங்களை செய்துள்ளோம்… நம்முடைய அனைத்து முயற்சிகளும் மேலும் ஒரு மிகப்பெரிய அளவிலான கொரோனா பரவல் ஏற்படாமல் தடுத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter