லண்டன்: போலீஸ் நிலையத்துக்குள் துப்பாக்கிச்சூடு… காவலர் உயிரிழப்பு!

Croydon, Police, போலீஸ், துப்பாக்கிச்சூடு
கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு அஞ்சலி செலுத்தி வரும் மக்கள். (Image: BBC / EPA)

லண்டன், செப்டம்பர் 25, 2020: தெற்கு லண்டனில் உள்ள குரோய்டன் கஸ்டடி மையத்தில் சந்தேகத்துக்குரிய 23 வயது இளைஞர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து விசாரித்து வந்தனர்.

இன்று அதிகாலை அவரை சோதனையிட்ட போது, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறை அதிகாரியை நோக்கி அந்த இளைஞர் சுட்டுள்ளார்.

இதில் அவரது மார்பில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. போலீஸ் அதிகாரியை சுட்ட இளைஞர், தன்னைத்தானே சுட்டுக் கொண்டு சரிந்தார்.

உடனடியாக அங்கு துணை மருத்துவக் குழுவினர் வரவழைக்கப்பட்டார். போலீஸ் அதிகாரி மற்றும் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட இளைஞர் என இருவருக்கும் முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காவல் அதிகாரி பரிதாபமாக உயிரிழந்தார். அதே நேரத்தில் அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த இளைஞர் பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக அவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரின் கண்காணிப்பில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இது பற்றிய எந்த ஒரு தகவலையும் மெட்ரோபாலிட்டன் போலீசார் வெளியிடவில்லை.

போலீஸ் நிலையத்தில் வைத்து போலீஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் போரிஸ் ஜான்சன், மெட்ரோபாலிட்டன் காவல் துறைத் தலைவர், உள்துறை செயலாளர் உள்ளிட்ட பலரும் இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில், “குரோய்டன் காவல் நிலையத்தில் உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க தங்கள் உயிரைப் பணயம் வைத்துக்கொள்பவர்களுக்கு நாங்கள் கடன்பட்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter