தீபாவளியையொட்டி ஊரடங்கு விதிகளை மீறாதீர்கள்… ரிஷி சுனக் வேண்டுகோள்!

Diwali, difficult, Rishi, தீபாவளி, கொரோனா
(Image: Wikimedia Commons)

தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி இந்துக்கள் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீற வேண்டாம் என்று ரிஷி சுனக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள், ஜெயினர்கள், சீக்கியர்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பொதுவாக ஐந்து நாட்கள் பண்டிகையாக தீபாவளி கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து முழுவதும் கொரோனா ஊரடங்கு உள்ளதால் முன்பு போல தீபாவளி கொண்டாட முடியாத நிலையில் இந்துக்கள் முடங்கிப் போய் உள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது, தினசரி தொற்று எண்ணிக்கையில் புதிய சாதனை படைத்தது என்று பல விஷயங்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தீபத் திருநாளையொட்டி ஊரடங்கு விதிமுறைகளை மீற வேண்டாம் என்று நிதித்துறை வேந்தர் ரிஷி சுனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை ஐந்து நாள் தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. நிதித்துறை வேந்தர் ரிஷி சுனக், டவுனிங் ஸ்ட்ரீட் இல்லத்தின் வாசலில் தீபங்களை ஏற்றினார்.

பிபிசி-க்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்த ஆண்டு ஊரடங்கு உள்ளதால் தீபாவளி கொண்டாட்டம் சற்று சவாலாக இருக்கிறது.இருப்பினும் ஊரடங்கை மீறாமல், ஆன்லைன் இணைய வழியாக உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ள வேண்டும்.

என்னைப் பொருத்தவரை நம்பிக்கை மிக முக்கியமான ஒன்று. நான் இந்து மத நம்பிக்கையை பின்பற்றுபவன்.

தீபாவளி திருநாளில் நானும் என் குடும்பத்தினரும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம், இந்த தருணத்தில் வேலை பளு அதிகமாக இருப்பதால் என்னால் முடிந்தவரைக் கோவிலுக்கு செல்வோம்.

இந்துக்களாகிய எங்களுக்கு இந்த பண்டிகை மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் சற்று கடினமானதாக இருக்கும்.

ஊரடங்கு இருப்பதால் உறவினர்கள், நண்பர்களை சந்திக்க எங்களுக்கு ஜூம் ஆப், மொபைல் போன் உள்ளது. இதன் மூலம் அவர்களை சந்திக்க முடியும்.

ஊரடங்கு முடிய சில வாரங்கள்தான் உள்ளது. எனவே, அதுவரை முழுமையாக ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும். அனைத்தையும் பாதுகாப்பாக விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்ய வேண்டும்” என்றார்.

நேரலையில் தரிசனம்:

ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ளதால் பிரிட்டனில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ஆன்லைன் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் லீசெஸ்டரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்காக ஒன்று கூடுவார்கள். இந்த ஆண்டு ஆன்லைனில் ஒன்றுகூடுதலை நடத்தும்படி நகர கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.

ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸிலும் கட்டுப்பாடுகள் உள்ளதால் வெளிப்புற தீபாவளி கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் அதே உற்சாகத்துடன் உறவினர்கள், நண்பர்களுடன் இணைந்து தீபாவளியை ஆன்லைன் காணொலி காட்சி மூலமாக கொண்டாட பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter