மீண்டும் கொரோனா… பப் மூடுவதாக தொடர்ந்து வெளியாகும் அறிவிப்பு!

வாடிக்கையாளர்கள் சிலருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து பப் மீண்டும் மூடப்படுவதாக மூன்று பப் உரிமையாளர்கள் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இது போன்ற அறிவிப்பை சில சிறிய பப் களும் அறிவித்து வருவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இங்கிலாந்தில் கடந்த சனிக்கிழமை பப், சினிமா தியேட்டர், சலூன் உள்ளிட்டவை திறக்கப்பட்டது. மாஸ்க் உள்ளிட்டவை இன்றி மக்கள் சர்வ சாதாரணமாக சமூக இடைவெளியை மதிக்காமல் ஒன்று கூடினர். மேலும், குடித்த பிறகு சமூக இடைவெளி முற்றிலும் இல்லாமல் போனது. இது தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் போலீசில் குவிந்தது.

மூன்று மாதங்களுக்கு பிறகு பப் உள்ளிட்டவை திறக்கப்படுவதால் வாடிக்கையாளர்களை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மக்களும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கேட்டுக்கொண்டிருந்தார். ஆனாலும் எந்த பப்பிலும் சமூக விலகல் முறையாக கடைபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை.

பப் திறக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆன நிலையில், மூன்று பப் உரிமையாளர்கள் தங்கள் பப் மீண்டும் மூடப்படுவதாக அறிவித்துள்ளனர்.

பர்ன்ஹாம்-ஆன்-சீ-யில் உள்ள லைட்அவுஸ் கிச்சன் மற்றும் கார்வெரி சமூகஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு கொரோனா பாசிடிவ் உறுதியாகி உள்ளது. சனிக்கிழமை பப்புக்கு வந்து சென்ற வாடிக்கையாளர்கள் உடல் நலம் பற்றிய ஆய்வு நடந்து வருகிறது. இவ்வளவு விரைவில் இந்த தகவலை நாங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடுவோம் என்று எதிர்பார்க்கவில்லை. இங்கு வந்த வாடிக்கையாளருக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து லைட்அவுஸ் கிச்சன் தற்காலிகமாக மூடப்படுகிறது. எங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளோம். நிலைமை சீரடைந்த பிறகு பாதுகாப்பு உறுதியான நிலையில் பப் மீண்டும் திறக்கப்படும்” என்று கூறியுள்ளது.

பர்ன்ஹாம் பகுதியில் செயல்படும் இந்தியத் துரித உணவு நிறுவனமான சாகர், வரும் வெள்ளிக் கிழமை வரை கடை மூடப்படுகிறது. கடையில் தற்போது தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது என்று கூறியுள்ளது.

மற்றொரு கடையான வேப் எஸ்கேப் பார் நிர்வாகி கூறுகையில், சனிக்கிழமை வாடிக்கையாளர்களுடன் தொடர்பிலிருந்த அனைத்து ஊழியர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்று வந்துள்ளது. இருப்பினும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா உறுதியானதால் வேப் எஸ்கேப் மூடப்பட்டு சுத்தம் செய்யும் பணி நடக்கிறது” என்று கூறினார்.

இதைப் போல பல பப்களும் மூடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம்தான் அரசு வெளியிட்ட வழிகாட்டுதல் அடிப்படையில் மிகவும் தூய்மை செய்து, கிருமி நாசினி எல்லாம் தெளித்து சுத்தம் செய்து தயார் செய்தோம். ஆனால் அதற்குள்ளாக பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. வேறு வழியின்றி பப் சேவையை நிறுத்தும் முடிவுக்கு வந்துள்ளோம் என்று கூறுகின்றனர்.

சனிக்கிழமை பப்கள் திறக்கப்பட்ட முதல் நாளில் ஆயிரக் கணக்கானோர் குவிந்தனர். இது தொடர்பாக வந்த புகார் அடிப்படையில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானாலும் பலரும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்டார்கள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே நேரத்தில் சனிக்கிழமை இரவு விடிய விடிய பப்களில் மக்கள் கூட்டம் தொடர்பாக வெளியான படங்கள் மக்களின் பொறுப்புணர்வு பற்றியும் அதிகாரிகளின் நடவடிக்கை பற்றியும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றன.