பிரெக்சிட் மசோதா – இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல்

பிரிட்டன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதன் தொடர்ச்சியாக வரும் 31-ம் தேதி ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுகிறது.

Coronavirus: சீனாவில் இருந்து வரும் விமானங்களை டெர்மினல் 4க்கு தனிமைப்படுத்தும் பிரிட்டன்

28 நாடுகள் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக இங்கிலாந்து அறிவித்தது. இது தொடர்பாக, 2016ல், மக்களிடம் கருத்து கேட்டு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கின.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு பாராளுமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாத நிலையில், 2 முறை இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடந்தது. இரண்டு முறை பிரதமர்களும் மாறினர்.

தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் முயற்சியால் பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்சிட் வரைவு மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறும் முடிவிற்கான பிரெக்சிட் மசோதாவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தனது ஒப்புதலை அளித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரெக்சிட் விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் ஸ்டீவ் பார்க்கலே தனது டுவிட்டரில், பிரெக்சிட் மசோதாவுக்கு ராணி அதிகாரப்பூர்வமான ஒப்புதலை அளித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.

புதர்களில் மறைந்திருந்து புகைப்படம் எடுத்த ஊடகத்தினர் – நோட்டீஸ் அனுப்பி ஹாரி எச்சரிக்கை