கடைகளில் முககவசம் அணிவது கட்டாயமாக வாய்ப்பில்லை! – குழப்பும் அமைச்சர்

Corona Infection rates, கொரோனா,

கடைகளுக்குள் இருக்கும்போது முகக் கவசம் அணிந்திருப்பது தொடர்பாக அமைச்சர் வெளியிட்ட கருத்து இந்த விவகாரத்தில் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் போரிஸ் ஜான்சன், கடைகளின் உள்ளே இருக்கும்போது பொது மக்கள் மாஸ்க் அணிய வேண்டியதை கடுமையாக்க வேண்டியிருக்கும் என்று கூறியிருந்தார். மேலும், அவரும் மாஸ்க் அணிந்து காட்சி கொடுத்தார். அனைத்து அமைச்சர்களும் முன் மாதிரியாக முகத்துக்குக் கவசம் அணிந்திருக்கும்படி பரிந்துரை வந்துள்ளதாகவும் கூறினார். இதனால், கொரோனா பரவலைத் தவிர்க்க கடைகளுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டியது கட்டாயம் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் டச்சி ஆஃப் லான்காஸ்டரின் வேந்தர் மைக்கேல் கோவ், கடைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு திட்டம் தொடர்பாக அரசின் முடிவு என்ன என்று மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மைக்கேல் கோவிடம் கடைகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மாஸ்க் அணிவது கட்டாயமாகும் என்று நான் நினைக்கவில்லை. அதே நேரத்தில் என்னைக் கேட்டால் முகக் கவசம் அணிவதை ஊக்குவிப்பேன். கடைக்குள் அனைவரும் இருக்கும்போது, அந்த சூழ்நிலையில் ஒருவரோடு ஒருவர் கலக்கும்போது, காற்றோட்டம் சரியாக இல்லாத நிலையில் முகக் கவசம் அணிவது நல்லது. ஒரு கடைக்குள் இருக்கும்போது முகக் கவசம் அணிந்து செல்வது அடிப்படையான நன்னடத்தையாக இருக்கும்” என்றார்.

முன்னதாக அவர், “பொது போக்குவரத்தில் பயணம் செய்யும் போது, கடைகளுக்குள் இருக்கும்போது அறிகுறி தென்படாத கொரோனா நோயாளி ஒருவர் இருக்கிறார் என்றால் அதன் மூலமாக கொரோனா பரவலாம். அந்த நேரத்தில் மற்றவர்கள் மாஸ்க் அணிந்திருப்பது அவர்களைக் காக்கும்” என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை கடைகளில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிக்கும் பணிகள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. தற்போது அமைச்சர் ஒருவர் அதற்கு வாய்ப்பில்லை என்ற அளவில் பேசியிருப்பது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.