பிரான்ஸ் எல்லை மூடல்… இங்கிலாந்தில் உணவுப் பொருள் பற்றாக்குறை ஏற்படுமா என அச்சம்!

Panic buyers, shops, ஊரடங்கு, கொரோனா, கட்டுப்பாடு
(Image: Zenpix)

புதிய வீரியம் மிக்க கொரோனா வைரஸ் இங்கிலாந்து முழுவதும் பரவி வரும் நிலையில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வீரியம் மிக்க கொரோனா பரவல் இங்கிலாந்து மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டது. புதிய கட்டுப்பாடுகள், கிறிஸ்துமஸ் தளர்வு ரத்து என தொடர்ந்து அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரான்ஸ், நெதர்லாந்து, இந்தியா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்து தொடர்பை துண்டிப்பதாக அறிவித்துள்ளன.

இங்கிலாந்துடனான பிரான்ஸ் எல்லை 48 மணி நேரத்துக்கு பூட்டப்படுகிறது என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. இதனால், சரக்கு லாரிகள் போக்குவரத்தும் அடியோடு நின்றுபோய்விட்டது.

இதனால் பிரான்சில் இருந்தும், பிரான்ஸ் வழியாக இங்கிலாந்துக்கு வரும் உணவுப் பொருட்கள் வருகை தடைபட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இருப்பினும் இந்த பயம் தேவையில்லாதது என்று சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரான்சும் இங்கிலாந்துடனான சரக்கு போக்குவரத்து விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

டோவர் மற்றும் கலெய்ஸூக்கு இடையே ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் லாரிகளில் சரக்குகள் வந்து செல்கின்றன. கிறிஸ்துமஸ் காலத்தில் சரக்கு போக்குவரத்து இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்த சூழலில் எல்லை மூடல் மிகப்பெரிய பிரச்னையை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உணவு மற்றும் பானங்கள் கூட்டமைப்பின் (எஃப்.டி.எஃப்) தலைவர் இயன் ரைட் கூறுகையில், “கிறிஸ்துமஸ் காலத்தில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை மிகப்பெரிய இடையூற்றை ஏற்படுத்தும் வகையில் உள்ளது” என்றார்.

சைன்ஸ்பரியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கிறிஸ்துமஸ் காலத்துக்குத் தேவையான உணவுப் பொருள் எல்லாம் இங்கிலாந்து வந்து சேர்ந்துவிட்டன. வரும் நாட்களில் காலிஃபிளவர், பிரகோலி, சிட்ரஸ் பழங்கள் உள்ளிட்ட பிரஷ் காய்கறி பழங்கள், உணவுப் பொருட்கள் வகையில் பற்றாக்குறை இருக்கும்.

தற்போது இங்கிலாந்தில் இருந்து பிரான்சுக்கு லாரிகள் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பிரான்சில் இருந்து வரும் சரக்குகள் இங்கிலாந்துக்கு வந்து கொண்டு இருக்கின்றன” என்றார்.

இதற்கிடையே எல்லையில் நிற்கும் லாரி உரிமையாளர்கள் தங்களை தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். நிலைமை எப்போது சீராகும் என்று புரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்!

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter