கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுக்க புதிய முழு ஊரடங்கு கட்டுப்பாடு கொண்டுவர வேண்டும் என்று லிவர்பூல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த வீரியம் மிக்க கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதைத் தடுக்க நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லிவர்பூல் நகரசபை நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் நாடு முழுமைக்குமான முழு ஊரடங்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
லிவர்பூல் பொறுப்பு மேயர் வின்டி சைமன் மற்றும் நகர கவுன்சில் கேபினெட் உறுப்பினர்கள் தற்போது கொரோனா வைரஸ் அபாயக் கட்டத்தில் பரவி வருகிறது. இந்த அபாய எச்சரிக்கையை உணர்ந்து கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கை கொண்டு வர வேண்டும் என்று கூறியுள்ளனர்.
அரசு அறிமுகம் செய்த நான்கு நிலை கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் வீரியம் மிக்க புதிய கொரோனா பரவலைத் தடுக்க பலன் அளிக்கவில்லை.
கடந்த இரண்டு வாரத்தில் லிவர்பூலில் கொரோனா எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது அது ஒரு லட்சத்துக்கு 350 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
லிவல்பூல் நகரில் மிகப்பெரிய அளவில் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு, கொரோனா கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டது. இதனால், மூன்றாம் நிலை கட்டுப்பாட்டில் இருந்து லிவர்பூல் 2ம் நிலைக்கு சென்றது.
தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் கடந்த வியாழக்கிழமை மூன்றாம் நிலைக்கு லிவர்பூல் சென்றுள்ளது.
லிவர்பூல் பொறுப்பு மேயர் வின்டி சைமன் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில், “புதிய மாற்றம் அடைந்த வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியதாக உள்ளது.
இந்த புதிய வைரஸ் கிருமி பரவலைத் தடுக்க நான்கு நிலை கட்டுப்பாடு எந்த வகையிலும் உதவவில்லை என்பதைக் கடந்த சில வாரங்களாக பார்த்து வருகிறோம்.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வது விரைவில் லிவல்பூல் நான்காம் நிலை கட்டுப்பாட்டுக்கு செல்லும் என்பதை காட்டுகின்றன.
பேரழிவை முன்கூட்டியே தடுத்து அகற்றவும், பொருளாதாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் நாங்கள் விரும்புகிறோம். எனவே, அரசு உடனடியாக செயல்பட்டு முடிந்தவரை மிக விரைவாக மக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்றார்.
நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், நகர சபை நிர்வாகிகள் என அனைவரும் நாடு முழுக்க கடும் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். பிரதமரும் விரைவில் கடும் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சூழலில் மக்கள் தங்கள் பொறுப்புணர்வை உணர்ந்து விழிப்புடன் இருப்பதை தவிர வேறு இல்லை.
இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…