பாத் அருகே அனுமதியின்றி நடந்த இசை நிகழ்ச்சி… ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கூடியதால் அச்சம்! 

RAF, Charmy Down

பாத் அருகே ஆர்.ஏ.எஃப் சார்மி டவுன் ஏர்ஃபீல்டில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிறு காலை வரை ஏராளமான இளைஞர்கள் அனுமதியின்றி திரண்டு ஆட்டமும் பாட்டமுமாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.

உலக அளவில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் இங்கிலாந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. மீண்டும் கொரோனாத் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது, அப்படி வந்தால் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழப்பார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதைப் பற்றிய கவலை ஏதும் இன்றி ஆயிரக் கணக்கில் இளைஞர்கள் பாத் அருகே உள்ள ஏர்ஃபீல்டில் குவிந்தது நள்ளிரவு இசை நிகழ்ச்சியை நடத்தியது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவான் மற்றும் சோமர்செட் போலீஸ் தரப்பில் கூறுகையில், சனிக்கிழமை இரவு 11 மணி அளவில் இது குறித்த தகவல் போலீசுக்கு கிடைத்தது. அங்கு சென்று பார்ததபோது பல நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். அந்த இடத்துக்கு வரும் பாதையில் போலீசார் தடைகளை ஏற்படுத்தினர். இருப்பினும் வாகனத்தை வழியிலேயே நிறுத்திவிட்டு பலரும் குறிப்பிட்ட இடத்துக்கு நடந்தே சென்றனர். காலை 6.40 மணி வரை இளைஞர்கள் அங்கு திரண்டிருந்தனர். அதன் பிறகு தங்கள் வாகனங்கள் மூலம் வீடுகளுக்குத் திரும்பினர்.

அந்த இடம் இருட்டாக, ஈரமான நிலையில் இருந்தது. 3000த்துக்கும் அதிகமான மக்கள் இந்த அனுமதி இல்லாத நடத்தப்பட்ட நிகழ்வில் பங்கேற்றனர். இது பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்து ஏற்படுத்தும் வகையில் இருந்தது” எனக் கூறியுள்ளனர்.

இந்த திடீர் நிகழ்ச்சிக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பலரும் தங்கள் சோஷியல் மீடியா பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒருவர் தன்னுடைய பதிவில், “ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12.30 மணி ஆகிறது. இப்போதும் கூட பலரும் கார்களில் வருவதும் போவதுமாக உள்ளனர். ஆனால், சார்மிடவுன் போலீசார் வெறுமனே வேடிக்கை பார்த்து வருகின்றனர். நள்ளிரவிலிருந்து தொந்தரவாக இருக்கும் அந்த இசைக்கு முடிவுகட்டுங்கள்” எனக் கூறியுள்ளார்.

பிபிசிக்கு ஒருவர் அளித்த பேட்டியில், “நள்ளிரவில் யாரோ காரில் ஸ்டீரியோவை அலறவிட்டுள்ளார்கள் என்று நினைத்தேன். ஆனால் அது தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையில், உள்ளூர் ஃபேஸ்புக் குழுவைப் பார்த்தபோது நடன நிகழ்ச்சி நடப்பது தொடர்பான தகவல் கிடைத்தது. மிக அதிக சத்தமாக இருந்தது. ஜன்னலைத் திறக்கவே முடியவில்லை” என்றார்.

சீஃப் சூப்பரிண்டென்ட் இயன் வைலி கூறுகையில், “பாத் மற்றும் வடகிழக்கு சோமர்செட் கவுன்சில், நெடுஞ்சாலைத் துறை, ஆம்புலன் சேவை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்தி, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பாதுகாப்பாக திரும்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களின் சுயநல நடவடிக்கை காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியை நடத்தியவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கொரோனா பாதிப்பு உள்ள காலத்தில் சமூக இடைவெளி, பாதுகாப்பு பற்றி கவலையின்றி ஊர் சுற்றும் இதுபோன்ற பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே அனுமதியற்ற இசை நிகழ்ச்சிகள், பார்ட்டிகள் லண்டன் உள்பட நாடு முழுவதும் ஆங்காங்கே அதிகரித்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk