கொரோனா பரவலைத் தடுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள கோரிக்கை!

Johnson, Christmas, celebrations, கொரோனா
(File Photo)

கொரோனா பரவலைத் தடுக்க மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் குறிப்பாக லண்டனில் மீண்டும் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மிக உச்சமான மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின் கீழ் லண்டன் சென்றுள்ளது.

இது தவிர நாட்டின் பல பகுதிகளில் புதிய வீரியமான கொரோனா வைரஸ் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் கிறிஸ்துமஸை ஒட்டி ஐந்து நாள் தளர்வு தேவையா என்ற கேள்வியும் எழுந்தது.

இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து, வேல்ஸ் ஆகிய நான்கு நாடுகளும் தளர்வு அறிவிப்பைத் தொடர்வது என்று முடிவு செய்துள்ளன. ஸ்காட்லாந்தும் வேல்ஸ்சும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது என்று முடிவு செய்துள்ளன.

இந்த சூழலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் டவுனிங் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் சந்திப்பை மேற்கொண்டார். அப்போது, “டிசம்பர் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடு தளர்வு வழங்கப்படும்.

அதே நேரத்தில் பொது மக்கள் தங்களுக்கு நெருக்கமானவர்கள், நண்பர்களை சந்திக்கச் செல்வதற்கு முன்பு அது சரியானதுதானா என்று தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைக் குறைத்துக்கொள்ள, சுருக்கிக்கொள்ள வேண்டும். சிறிய கிறிஸ்துமஸாக இருந்தால் அது பாதுகாப்பான கிறிஸ்துமசாக இருக்கும்.

இந்த தளர்வு நாட்களில் மூன்று குடும்பங்கள் வரை ஒன்றாக சந்திக்கலாம் என்று அறிவித்திருந்தாலும், அதுதான் உச்சம் மக்கள் இந்த சந்திப்பில் கவனமாக இருக்க வேண்டும்.

தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ள பகுதியில் இருந்து பாதிப்பு குறைவாக உள்ள பகுதிக்கு செல்பவர்கள் இரவு நேரத்தை வீட்டுக்கு வெளியே கழிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வயதானவர்கள், தொற்று வாய்ப்பு அதிகம் உள்ளவர்களை சந்திக்கச் செல்வதில் அதிக கவனம் தேவை. முடிந்தவரை அவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும் வரை அவர்களை சந்திக்காமல் இருப்பது நல்லது.

முதியவர்கள், தொற்றுக்கு வாய்ப்புள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது நம்முடைய இலக்காக உள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்த பணி முடிக்கப்படும்” என்றார்.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter