லிவர்பூல்: ஊரடங்குக்கு 2 மணி நேரத்துக்கு முன்பு ஆட்டம் போட்ட இளைஞர்கள்! – அதிர்ச்சியில் மக்கள்

Liverpool
லிவர்பூல் சாலையில் கூடிய இளைஞர்கள்!

லிவர்பூல், அக்டோபர் 14, 2020: லிவர்பூலில் ஊரடங்கு விதிகள் நடைமுறைக்கு வர இருந்த இரண்டு மணி நேரத்துக்கு முன்பு சாலையில் கூடிய ஆயிரக் கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் மூன்றாம் நிலையான அதி தீவிர கட்டுப்பாடுகள் லிவர்பூல் நகர்ப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் தெருக்களில் ஏராளமானவர்கள் கூடி பாட்டுப் பாடியும், நடனம் ஆடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்தை கலைக்க முயன்ற போலீசார் மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. போலீசாரின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இது நகரத்துக்கு நேர்ந்த அவமானம் என்று அந்நகர மேயர் வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேயர் ஜோ ஆண்டர்சன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களைப் பார்க்கும் போது நகரத்துக்கு நேர்ந்த அவமானமாக கருதுகிறேன். நம்முடைய போலீஸ் அதிகாரிகளைத் தாக்கியது ஏற்றுக்கொள்ள முடியாது.

நம்முடைய சுகாதார நிறுவனம் கடுமையான அழுத்தத்தில் உள்ளது. 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளார்.

இந்த உண்மைகளை எல்லாம் ஒதுக்கித் தள்ளியதால்தான் நம்முடைய நகரத்திற்கு 3ம் நிலை கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

நேற்று இரவு பப், ரெஸ்டாரண்ட்கள் முன்பு கூடிய மக்கள் கேளிக்கைகளில் ஈடுபட்டனர். பப்கள், ரெஸ்டாரண்ட்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக மூடாமல் இருந்துள்ளன. 38 நிறுவனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து மெர்சைட் காவல்துறையின் தலைமை காஸ்டபிள் ஆண்டி குக் கூறுகையில், “சிறுபிள்ளைத் தனமான, அபாயகரமான, சுயநல போக்குடன் பலரும் சாலைகளில் கூடியிருந்தனர்.

பெரும்பான்மையான மக்கள் சட்டத்துக்கு உட்பட்டு வீடுகளில் இருந்தனர். சிலர் சட்ட விரோதமாக சாலைகளில் கூடியிருந்தனர். இதனால் காவல் துறைக்குக் கூடுதல் பளு ஏற்பட்டது” என்றார்.

லிவர்பூல் நகரில் தற்போது ஒரு லட்சம் பேருக்கு 635 தொற்று நோயாளிகள் என்ற அளவில் பரவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

♦ Facebook

♦ Twitter