கொரோனா பரவல் அதிகரிப்பு எதிரொலி… அபெர்டீனில் மீண்டும் ஊரடங்கு!

Nicola Sturgeon, Aberdeen
ஸ்டாட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன்.

கொரோனாத் தொற்று க்ளஸ்டர் காரணமாக ஸ்காட்லாந்தின் அபெர்டீனில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது என்று முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.

ஸ்டாட்லாந்தின் அபெர்டீன் நகரத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு புதிதாக ஒரே நாளில் 54 கொரோனாத் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா நோய்த் தொற்று சமூக பரவல் என்ற நிலையை அடையும் நிலை உள்ளது என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் அபெர்டீன் நகரத்தில் இன்று (புதன் கிழமை) மாலை 5 மணி முதல் முழு ஊரடங்கு கொண்டு வரப்படுவதாக முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் அறிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து பப்கள், ரெஸ்டாரண்ட்கள் மூடப்படும். நகரத்துக்குள் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் ஃபேஸ் மாஸ்க் அணிய வேண்டும். அபெர்டீன் நகரத்துக்கு யாரும் வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். 2.28 லட்சம் மக்கள் தொகை கொண்ட அபெர்டீன் நகரத்தில் பொது மக்கள் மற்றவர்கள் இல்லங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓய்வு உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்காகவும் ஐந்து மைலுக்கு மேல் பயணம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அபெர்டீன் நகரத்துக்கு வந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எந்த அறிவுறுத்தலும் இல்லை. அவர்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நகரத்திலேயே இருக்கலாம் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அடுத்த புதன் கிழமை வரை நடைமுறையில் இருக்கும். தேவை எனில் இதை நீட்டிப்பது அல்லது நிறுத்துவது குறித்து அடுத்த புதன் கிழமை முடிவு செய்யப்படும் என்று முதல்வர் நிக்கோலா அறிவித்துள்ளார்.

மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து துணைத் தலைமை கான்ஸ்டபிள் வில் கெர் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்ற உள்ளோம். மேலும் பொது மக்களுக்கு வைரஸ் பரவல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் செய்வோம்” என்றார்.

அபெர்டீன் நகரில் கடந்த மாதம் மிகக் குறைவான அளவிலேயே தொற்று இருந்தது. ஒன்று, இரண்டு, சில நாட்களில் யாருக்கும் தொற்று இல்லை என்ற நிலையில் நகரம் பாதுகாப்பாக இருந்தது. ஜூலை 30ம் தேதிக்குப் பிறகு நிலைமை தலைகீழாக மாறியது. ஐந்து, பத்து, 15 என உயர்ந்த தொற்றின் எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 35ஐ கடந்தது. இன்று அது 54 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து சமூகப் பரவல் நிலையை வைரஸ் அடைந்துவிடாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்து செய்திகளை தமிழில் தெரிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்…

Facebook : https://www.facebook.com/tamilmicsetuk/

Twitter : https://twitter.com/tamilmicsetuk